×

ஒரு வாரத்தில் 81 ரவுடி, 320 சமூக விரோதிகள் கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தலாகவும் செயல்பட்டு வந்த ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் மத்திய மண்டல ஐஜி ஜெயராம், தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, தஞ்சை எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் உத்தரவின்பேரில் தஞ்சை மாவட்டத்தில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இப்படையை சேர்ந்த போலீசார் கடந்த ஒரு வாரத்தில் 81 ரவுடிகள் உட்பட 320 சமூக விரோதிகளை கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது: கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் கம்மாள தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன்கள் மாரியப்பன் (35), சாமிநாதன் (34) மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து எஸ்பி பரிந்துரையின்பேரில் நாச்சியார்கோயில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம், இதர ஆவணங்களின்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதேபோல் கும்பகோணம் அருகே திருவிசைநல்லூர் தோப்பு தெருவை சேர்ந்த ரமேஷ் (35) மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து எஸ்பி பரிந்துரையின்பேரில் நாச்சியார்கோயில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணங்களின் அடிப்படையில் ரமேஷை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டனர்.

மதுபோதையில் வாலிபர் தற்கொலை: திருவையாறு அடுத்த கல்யாணபுரம் சாமான்கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் ஆனஸ்ட்ராஜ் (22). இவர் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு ஊர் சுற்றி கொண்டிருந்தது. இதனால் ஆனஸ்ட்ராஜை பெற்றோர் திட்டினர். இதனால் மனமுடைந்து மதுபோதையில் இருந்த ஆனஸ்ட்ராஜ் வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டு ஒயரால் தூக்கிட்டு கொண்டார். இதையடுத்து அவரை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து முருகானந்தம் கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் யோகராஜ் வழக்குப்பதிந்து ஆனஸ்ட்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரித்து வருகின்றனர்.

முதியவர் தற்கொலை: மெலட்டூர் அடுத்த சோமாசி மண்டபத்தை சோந்தவர் துளசி அய்யா (73). இவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி மனமுடைந்து துளசி அய்யா விஷம் குடித்தார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

பெண்ணை தாக்கி மிரட்டிய தூய்மை பணியாளர் மீது வழக்கு: திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலம் காளியம்மன்கோயில் தெரு சசிகுமார் மனைவி பெரியநாயகி (26). இவர் கடந்த 22ம் தேதி ஒரத்தூர் பஸ்ஸ்டாப் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே தெருவை சேர்ந்த தூய்மை பணியாளர் செழியன் (49) என்பவர் முன்விரோதம் காரணமாக திட்டி, கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் பெரியநாயகி நேற்று முன்தினம் புகார் செய்தார். இதேபோல் கடந்த 21ம் தேதி காளியம்மன்கோயில் அருகில் செழியனையும், அவரது மனைவியையும் சசிகுமார் மற்றும் பெரியநாயகி இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக செழியன் புகார் செய்தார். இரு புகார்களையும் ஏற்று சப்இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குகள் பதிந்து விசாரணைசெய்தார்.

தீ விபத்தில் 2 கூரை வீடு சாம்பல்: பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் தெற்கு தெருவில் அடுத்தடுத்த கூரை வீடுகளில் வசிப்பவர்கள் கலியமூர்த்தி, ஆயிராசு. இவர்களது கூரை வீடு எதிர்பாராமல் தீப்பற்றி எரிந்தது. இந்த தகவல் கிடைத்ததும் பாபநாசம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீவிபத்தில் வீட்டில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சாம்பலானது.

இளம்பெண் தற்கொலை: பாபநாசம் அடுத்த மட்டையான்திடலை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் ரஷ்யா (17). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் ரஷ்யா மனமுடைந்து விஷம் குடித்தார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஷ்யா நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

கர்ப்பிணி தற்கொலை: திருவோணம் அடுத்த பட்டுவிடுதியை சேர்ந்த ரங்கசாமி மகள் ரேணுகா (28). இவருக்கும் அக்னி பட்டத்தை சேர்ந்த துளசிராமனுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ரேணுகா 5 மாத கர்ப்பிணியாக இருந்ததால் தாயார் வீடான பட்டுவிடுதிக்கு சென்றார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி தீராத வயிற்று வலியால் ரேணுகா பூச்சிமருந்து குடித்தார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து ரங்கசாமி அளித்த புகாரின்பேரின் திருவோணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இன்ஜினியர் தற்கொலை: திருவோணம் அடுத்த புதுவிடுதி பெத்திதெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட இவர், நேற்று காலை வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவோணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : anti-socials , Social enemies, arrested
× RELATED எல்லா சமூகவிரோதிகளும் இங்குதான்...