×

கொரோனா அதிகரிப்பு காரணமாக ஊட்டி மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்தது

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகர பகுதிகளை காட்டிலும், கிராமப்புறங்களில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த கிராமங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட கிராம பகுதிகளில் மலை காய்கறி விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. காய்கறிகளை அறுவடை செய்யும் விவசாயிகள் ஊட்டி மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

கொரோனா பாதிப்பு காரணமாக கிராமப்பகுதிகள் மூடப்பட்டுள்ளதால், காய்கறிகளை அறுவடை செய்து மார்க்கெட்டிற்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பூண்டு, உருளைகிழங்கு ஆகியவற்றை தவிர கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளுக்கு விலை கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டிற்கு வழக்கமாக நாள் ஒன்றுக்கு 20 டன் காய்கறி வரை கொண்டு வரப்படும். கடந்த சில நாட்களாக சுமார் 10 டன் அளவிற்கே காய்கறிகள் வருகின்றன. இது குறித்து வியாபாரி கூறியதாவது: ஊட்டி அருகேயுள்ள கிராமங்களில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால் அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பயிரிட்ட காய்கறிகளை அறுவடை செய்ய முடியாமல் உள்ளனர். இதுதவிர கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களுக்கு  போதிய விலை கிடைப்பதில்லை. விவசாயிகள் அவற்றை அறுவடை செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் காய்கறி வரத்து குைறந்துள்ளது. இதுதவிர மழையும் ஏமாற்றி வருகிறது. கிராமப்புறங்களில் தொற்று பாதிப்பு குைறந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரே காய்கறிகள் அதிகமாக வர வாய்ப்புள்ளது, என்றார்.

Tags : Ooty , Corona increase, feed market, vegetable
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்