×

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் அத்துமீறி சாலை அமைக்கும் பணி

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்து வருகிறது. 2 மாடிக்கு மேல் கட்டிடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்கு, அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆற்றினை ஆக்கிரமித்து 4 முதல் 5 மாடி கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கன மழைக்கு ஆக்கிரமிப்பு காரணமாக பல இடங்களில் மண் சரிவு மற்றும் வெள்ள நீர் புகுந்து குன்னூர் நகரம் பாதிப்புக்குள்ளாகியது. தன்னார்வலர்கள் இணைந்து குன்னூர் ஆற்றினை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் குன்னூர் பகுதியில் உள்ள மக்கள் விதிமுறைகளை மீறி ஆறுகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: குறிப்பிட்ட அளவிற்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது என விதிமுறைகள் இருந்தும், அரசியல் பலத்தைக் கொண்டு 4 முதல் 5 மாடி கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். முக்கிய ஆறுகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டுவதால் கனமழை காலங்களில் மண்சரிவு மற்றும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. மலையை குடைந்து சாலை அமைப்பதற்கு தடை உள்ள நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கை பயன்படுத்தி சில மாபியா கும்பல் இரவோடு இரவாக தேயிலை தோட்டங்களில் அத்துமீறி சாலை அமைத்து வருகின்றனர்.
 
குன்னூர் அருகே உள்ள அளக்கரை பகுதியில் தேயிலை தோட்டத்தின் நடுவில் பல கிலோ மீட்டர் தொலைவு வரை மலையை குடைந்து சாலை அமைத்து வருகின்றனர். இதனை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coonoor ,tea plantation , Coonoor, tea garden, road construction, work
× RELATED குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் 8 நாட்கள் எரிந்த காட்டுத்தீ அணைந்தது