×

தூர்வார ஒதுக்கிய நிதியில் முறைகேடு; ஏரிக்கரையில் விவசாயிகள் பொதுமக்கள் போராட்டம்

தஞ்சை: நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் 7 ஏரிகளை தூர்வார ஒதுக்கிய நிதியில் முறைகேடு கண்டித்து ஆச்சான்பட்டி ஏரிக்கரையில் விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நபார்டு வங்கி திட்டத்தின்கீழ் 7 ஏரிகளை தூர்வார ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்துள்ளதை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையிலான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தஞ்சை மாவட்டம் ஆச்சான்பட்டி ஏரிக்கரையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கிப்பட்டி அருகே ஆச்சாம்பட்டியில் 250 ஏக்கரில் உள்ள ஏரியை நம்பி சுற்றுவட்ட கிராமங்களில் 250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த 3ஆண்டுகளுக்கு முன் நபார்டு வங்கியின் மூலம் இந்த ஏரியை தூர்வார ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாகியும் இதுவரை முறையாக தூர்வாரும் பணிகள் நடக்கவில்லை. இதனால் ஏரிகளில் உள்ள குமிழிகள் காணாமல் போய்விட்டது. ஏரிக்கு வரக்கூடிய மழைநீர் முழுவதும் வெளியேறி விடுகிறது. 3 ஆண்டுகளாக ஏரி வறண்டு கிடப்பதால் விளைநிலங்களுக்கு போதிய தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியவில்லை. ஆச்சான்பட்டி, செங்கிப்பட்டி உள்ளிட்ட 7 ஏரிகளை நபார்டு வங்கி திட்டத்தின்கீழ் தனிநபரிடம் தொகுப்புமுறை ஒப்பந்தத்தில் தூர்வாரும் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 7 ஏரிகளும் முறையாக தூர்வாரவில்லை. இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. எனவே மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து 7 ஏரிகளிலும் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் 7 ஏரிகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும்.

ஏரிகளுக்கு வரக்கூடிய தண்ணீர் பாதைகளை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறியதாவது: ஆச்சாம்பட்டியில் உள்ள ஆச்சான் ஏரி மூலம் 250 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியின் நீர் கொள்ளளவை அதிகப்படுத்தவும், கரையை சீரமைக்கவும், ஏரியில் உள்ள 3 மதகுகளை புதிதாக கட்டவும் 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் பழைய மதகுகளை உடைத்து விட்டு புதிதாக கட்டப்படுமென எதிர்பார்த்தோம். ஆனால் 2 மதகுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதில் நந்தவன மதகு கட்டாமல் விடப்பட்டதால் ஏரியில் நீர்த்தேக்க முடியாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விடப்பட்ட மதகை உடனடியாக சீரமைக்க வேண்டும். இதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Tags : Durbar ,lake ,struggle , Finance, abuse, lake, farmers, struggle
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...