×

சாதி பிரச்சினையை காரணம் காட்டி பணி மாறுதல் கேட்டால், எந்த கிராமத்திலும் மாற்று சாதியினர் பணிபுரிய முடியாது : அரசு ஊழியர்களுக்கு ஐகோர்ட் அறிவுரை

மதுரை : அரசு ஊழியர்கள் அனைத்திலும் முன்களப் பணியாளராக இருந்து உழைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இடமாறுதலை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கின் பின்னணி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராதானூரைச் சேந்தவர் வாசு. இவர் ராதனூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தார். பின்னர் சில குற்றச்சாட்டு அடிப்படையில் ராதானூரில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவில் இதே ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓடைக்கல் கிராம உதவியாளராக இடமாறுதல் செய்யப்பட்டார். இந்த இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் ராதானூர் கிராம உதவியாளராக நியமிக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் வாசு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் ஓடைக்கல் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். இந்த அலுவலகத்தில் உயர் ஜாதியனரால் எனக்கு துன்புறுத்தல் ஏற்படுகிறது. என்னால் பணியாற்ற முடியவில்லை. எனவே முந்தைய இடத்திற்கே என்னை பணிமாற்றம் செய்யுங்கள், எனத் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு ஐகோர்ட் அறிவுரை


இந்த மனு நீதிபதி சுரேஷ் குமார் அமர்வு முன்பு காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், அரசு ஊழியர் பணி என்பது மிகவும் சிறந்த பணி. கொரோனா காலத்தில் ஊழியர்கள் பலர் ஊதியமின்றி தவித்து வருகின்றனர். ஆனால் கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள் சம்பளத்தில் ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. தினக்கூலி, அமைப்புசாரா தொழிலாளர்கள் வருவாயை இழந்து வாழ்க்கை நடத்த போராடி வருகின்றனர். எனவே,அரசு ஊழியர்கள் அனைத்திலும் முன்களப் பணியாளராக இருந்து உழைக்க வேண்டும். அதே போல், சாதி பிரச்சினையை காரணம் காட்டி பணி மாறுதல் கேட்டால், எந்த கிராமத்திலும் மாற்று சாதியினர் பணிபுரிய முடியாது. சொந்த ஊரில் வேலை பார்க்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் நினைத்தால் நிர்வாகம் செயல்படாது.அரசு ஊழியர்கள் தன் குடும்ப நலனை பற்றி மட்டும் சிந்திக்காமல், சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மேலும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : village ,government employees ,iCourt , Caste issue, change of job, civil servants, iCourt, advice
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...