×

ஒரு வாரத்துக்குப் பின் கடலுக்கு சென்ற மீனவர்கள் ‘அப்செட்’; ஏமாற்றியது இறால்; காப்பாற்றியது காரல்...விலையுயர்ந்த மீன்கள் குறைவால் நஷ்டம் என வருத்தம்

ராமேஸ்வரம்: ஒரு வார கால இடைவெளிக்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் குறைந்தளவு மீன்பாடுடன் கரை திரும்பினர். மீன்வரத்து குறைவானதால் மீனவர்கள் பலரும் ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலைநிறுத்தம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் போராட்டத்தை வாபஸ் பெற்று மீன்பிடிக்கச் சென்றனர். அன்று காலையில் வழக்கம்போல் மீன்துறை அனுமதி டோக்கன் பெற்று 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ஒரு வார கால இடைவெளிக்குப் பிறகு செல்வதால் நல்ல மீன்வரத்து இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றனர்.

நேற்று காலை கரை திரும்பிய மீனவர்களின் படகுகளில், அவர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இறால் உள்ளிட்ட விலையுயர்ந்த மீன்கள் அதிகம் இல்லை. அதிகபட்சமாக 40 கிலோ வரை இறால் உள்ளிட்ட பலவகை மீன்களும் பிடிபட்டிருந்தன. இறால் மீன்வரத்து எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். அதேசமயம், சில படகுகளில் 500 கிலோ முதல் 750 கிலோ வரை காரல் மீன்கள் பிடிபட்டிருந்தன. இவை ஓரளவுக்கு விலை போகும். இறால் உள்ளிட்ட விலையுயர்ந்த மீன்பாடு இல்லாததால் பெரும்பாலான மீனவர்களுக்கு அதிக லாபம் இல்லை. மீன்வரத்து குறைவு காரணமாக, மீன்பிடி செலவுகளை ஈடுசெய்ய முடியாமல் ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Tags : Fishermen ,carol ,sea , In the sea, fishermen, shrimp, fish
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...