×

நாகர்கோவிலில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி தொடக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மழை நீர் செல்ல ஏதுவாக கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது. நாகர்கோவிலில் கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் முன்பு பாசனத்திற்காக பயன்பட்ட கால்வாய்கள் ஆகும். சில பகுதிகளில் ஆக்ரமிப்புகளால் இந்த கால்வாய்கள் காணாமல் போயுள்ளன. சில பகுதிகள் குறுகிப் போயுள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வழியின்றி தெருக்களில் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. தற்ேபாது கோட்டாறு பஜனை மடத் தெரு மற்றும் வடசேரி காங்கேயன் ஓடையில் மண் சேர்ந்து மேடாகவும், சில பகுதிகளில் ஆக்ரமிப்பு காரணமாகவும், இந்த கால்வாய் குறுகிப் போயுள்ளது. இதனால் அசம்பு சாலையில் சற்று மிதமான மழை பெய்தால் கூட கிருஷ்ணன்கோயில் அருணாங்குளம் ஓடையில் இருந்து மழைநீரும் கழிவுநீரும் கலந்து, ஆராட்டு ரோட்டில் ஆறாக பாய்ந்து வந்து பாலமோர் சாலையில் காங்கேயன் ஓடை மற்றும் சாலையை மூழ்கடித்து செல்கின்றது.

இதனால், மழை பெய்யும்போது, அசம்பு சாலையில், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல், பழுதாகி நிற்பது வாடிக்கையாகி விட்டது. இதுபற்றி தினகரனில் அடிக்கடி செய்திகள் வௌியாகி உள்ளன.  கடந்த இருநாட்கள் முன்பும் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று காலை டிஸ்லரி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர் வாரி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதுபற்றி மாநகர் நல அலுவலர் டாக்டர் கின்ஷாலிடம் கேட்டபோது, வழக்கமாக பருவமழை பெய்யத் தொடங்கும் முன்பு கால்வாய்கள் தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நடைபெறுவது வழக்கம். தற்போதும், அதுபோல் மழை நீர் தேங்காமல் செல்ல ஏதுவாக தூர் வாரி சுத்தம் செய்யப்படுகிறது எனக்கூறினார்.

Tags : Nagercoil , Nagercoil, sewerage, dredging work
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...