×

பருவமழை தொடங்க உள்ளதால் சென்னையில் 105 குளங்கள் சீரமைப்பு: மேலும் 70 குளங்களை சீரமைக்கும் பணி மும்முரம்

சென்னை: பருவமழை தொடங்க உள்ளதால் சென்னையில் உள்ள 105 குளங்களை சீரமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மேலும் 70 குளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள வடிகால்களை தூர்வாருவது தொடர்பாகவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்து, குளங்களை சீரமைப்பது தொடர்பாகவும் மாநகராட்சி சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து, சென்னையில் உள்ள 105 குளங்களை சீரமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மேலும் 70 குளங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 8 குளங்களில் பணிகள் தொடங்க வேண்டும், 27 குளங்களுக்கு நிதி கோரி அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி முதல் பகுதியின் கீழ் 32 குளங்களை சீரமைப்பு பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 28 குளங்கள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணி நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி 2வது பகுதியின் கீழ் 20 குளங்கள் எடுத்து கொள்ளப்பட்டு 11 பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 9 பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி 3வது திட்டத்தின் கீழ் 10 குளங்கள் எடுத்து கொள்ளப்பட்டு 1 பணி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 9 பணிகள் நடைபெற்று வருகிறது.


சென்னை பெருநகர் வளர்ச்சி நிதியின் கீழ் 39 குளங்கள் சீரமைப்பு பணிக்கு எடுத்து கொள்ளப்பட்டு, 8 குளங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் 64 குளங்களை சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 56 குளங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளது. 9 குளங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த குளங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தால் சென்னையில் 1 டிஎம்சி மழைநீரை சேமித்து வைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

* 43 ஆயிரம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி
சென்னை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் வரை 3.26 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2.57 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு நல்ல நிலையில் உள்ளது தெரியவந்தது. 19 ஆயிரம் கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்புகளை முன்னேற்றம் செய்ய வேண்டும் என்றும், 26 ஆயிரம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி இல்லை என்றும் தெரியவந்தது. தொடர்ந்து, 43 ஆயிரம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai , Monsoon, Chennai, 105 ponds, renovation, 70 ponds, renovation work, busy
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...