×

களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு சப்ளை: திருவொற்றியூர் மண்டலத்தில் அவலம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் குப்பை வண்டிகளில் உணவு வழங்கும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட 14 வார்டுகளில் கொரோனா தடுப்பு பணியில் நூற்றுக்கணக்கான களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, மதிய உணவு திருவொற்றியூர் வன்னியர் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தயாராகிறது. அங்கு சமைத்த உணவுகளை பொட்டலங்களாக அந்தந்த வார்டுகளுக்கு கொண்டு சென்று களப்பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு  விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்த உணவு பொட்டலங்களை எடுத்து செல்ல வாகன வசதி இல்லையென கூறி, குப்பை வண்டிகளில் எடுத்து சென்று விநியோகித்து வருகின்றனர். சுகாதாரம் இல்லாமல் வழங்கும் இந்த உணவை பல பணியாளர்கள் சாப்பிடுவதற்கு அச்சப்படுகின்றனர். மேலும், பணியாளர்கள் பலர் முறையாக முகக்கவசம்  இன்றி உணவுகளை பாக்கெட் செய்து, விநியோகிப்பதால் களப்பணியாளர்கள் அதை சாப்பிட அச்சப்படும் நிலை உள்ளது. இந்த மண்டலத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு மட்டும் உயர்தர ஓட்டல்களிலிருந்து தரமான உணவுகள் வழங்கப்படுகிறது.

இதுபோல், பாகுபாடுடன் உணவு வழங்குவதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பணியாளர்களுக்கு குடிநீர் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசம், கையுறை போன்றவைகளை முறையாக வழங்குவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. எனவே, களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் தரமான உணவு வழங்க வேண்டும். இதுபோல், அலட்சியமாக நடந்துகொள்ளும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : field workers ,region ,Tiruvottiyur ,Disaster , In field work, staff, garbage cart, food supply, Tiruvottiyur zone, disgrace
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!