×

பிஇ, பிடெக் படிக்க 2.63 லட்சம் மாணவர்களை சேர்க்கலாம்: தமிழகத்துக்கு ஏஐசிடிஇ அனுமதி

சென்னை: பிஇ, பிடெக் படிக்க 2.63 லட்சம் மாணவர்களை சேர்க்க ஏஐசிடிஇ தமிழகத்துக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவையும் அடங்கும். மொத்தமுள்ள 500 கல்லூரிகளில், இந்தக் கல்வியாண்டில்  2 லட்சத்து 63 ஆயிரத்து 184 மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்(ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது.  தமிழ்நாட்டில் புதிதாக 3 பொறியியல் கல்லூரிகள் தொடங்கவும், அவற்றில் ஆயிரத்து 80 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், பி.ஆர்க்., கட்டடக்கலை இளங்கலை பட்டப்படிப்பில், 22 கல்லூரிகளில் 1,520 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மூலம் அளிக்கப்படும் பி.ஆர்க்., அப்ளைடுஆர்ட்ஸ் அண்டு கிராப்ட் (applied arts and crafts), வரைகலை (design), பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், ஹோட்டல் மேலாண்மை மற்றும் சமையல் கலை, மேலாண்மை பட்டப்படிப்புகள், எம்.சி.ஏ., பார்மசி ஆகிய பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான அனுமதியை, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் பட்டய படிப்புகளில் (டிப்ளமோ) 496 கல்வி நிறுவனங்களில், ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 371 இடங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எம்.இ., எம்.டெக்., முதுகலை பட்டப் படிப்புகளில், 358 கல்வி நிறுவனங்களில் 30 ஆயிரத்து 306 இடங்களிலும், எம்.பி.ஏ., பட்டப்படிப்பில் 350 கல்வி நிறுவனங்களில், 29 ஆயிரத்து 786 இடங்களிலும், எம்.சி.ஏ., பட்டப்படிப்பில், 183 கல்வி நிறுவனங்களில் 10 ஆயிரத்து 606 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதுகலை தொழில்நுட்பப் பட்டப் படிப்புகளில், ஏற்கனவே உள்ள 618 கல்வி நிறுவனங்களில், 71,530 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு புதிதாக எம்.இ., பட்டப் படிப்பில் ஒரு கல்வி நிறுவனத்தில், 12 இடங்களுக்கும், எம்.பி.ஏ., எனப்படும் மேலாண்மை படிப்பில் ஒரு கல்வி நிறுவனத்தில் 60 இடங்களுக்கும் அனுமதி அளித்து ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது. அதேபோன்று இளங்கலை தொழில்நுட்பப் பட்டப் படிப்புகளில் ஏற்கனவே 516 கல்வி நிறுவனங்களில், 2 லட்சத்து 66 ஆயிரத்து 14 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. இந்தாண்டு புதிதாக இளங்கலை பொறியியல் படிப்பில், மூன்று புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு ஆயிரத்து 80 மாணவர்களை சேர்ப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பப் படிப்பினை வழங்கும் 1,240 கல்வி நிறுவனங்களில், 5 லட்சத்து 23 ஆயிரத்து 67 மாணவர்கள் சேர்ப்பதற்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் அனுமதியை மட்டும் பெற்றால் போதுமானது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் 2020-21ம் கல்வி ஆண்டில் 9,691 கல்லூரிகளில் 30 லட்சத்து 88 ஆயிரத்து 512 மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

* மத்திய அரசு கையில் பார்மசி
புதிதாக கட்டிடக்கலை மற்றும் பார்மசி கல்வி நிறுவனங்களும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக 50 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர் சேர்க்கை இருந்த கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை 30 சதவீதமாக குறைத்துள்ளது.

Tags : BE ,BTech ,AICTE ,Tamil Nadu , 2.63 lakh students can enroll in Tamil Nadu, AICTE admission to study BE, BTech
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்களை...