×

ஒரு கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்த மகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி எஸ்பியிடம் மூதாட்டி பரபரப்பு புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி (72). இவரது மகள் தங்கபாய் ராஜகுமாரி. சாந்தகுமாரிக்கு செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வீட்டு மனையும், பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுப்போக்கு பூங்கா அருகில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வீட்டு மனையும், வேப்பம்பட்டில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வீடும் உள்ளது. கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில் சாந்தகுமாரி மட்டும் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சொத்தை தன் பெயருக்கு மாற்றித்தருமாறு மகள் அடிக்கடி தொந்தரவு செய்துள்ள நிலையில் கடந்த 15.6.2019 தேதி மகள் தங்கபாய் ராஜகுமாரி, அவரது கணவர் லாங்கினாஸ் சாந்தகுமார், பேரன் ஜோசப் மற்றும் அடியாட்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை பலமாக தாக்கி வீட்டில் வைத்திருந்த அனைத்து பத்திரங்களையும் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து மூதாட்டியை காரில் ஏற்றிய அவரது மகள் அம்பத்தூரில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது தாய்க்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் அவரை பராமரிக்கும்படியும் சொல்லி அங்கு சேர்த்து விட்டு சென்றுள்ளார். ஆனால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லியும் அந்த முதியோர் இல்லத்தில் இருந்து இவரை அனுப்ப மறுத்துள்ளனர். இதற்கிடையில், இந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் சாந்தகுமாரியிடம், தினேஷ் மற்றும் தேவேந்திரன் ஆகிய இருவரும்,‌ “நீ இறந்தால் தான் சொத்து என் நண்பனுக்கு (பேரன் ஜோசப்) கிடைக்கும் என்றும், அதனால் உனக்கு மெல்ல மெல்ல சாகக்கூடிய மருந்தை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.” இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி செய்வதறியாது தவித்து வந்துள்ளார்.

இதனையடுத்து அவரது அக்கா அண்ணன் தம்பி ஆகிய 3 பேரும் அம்பத்தூர் முதியோர் இல்லத்திற்கு சென்று மூதாட்டியை மீட்டுச் செல்ல வந்துள்ளனர். ஆனால் 2 லட்சத்து 55 ஆயிரம் பராமரிப்பு செலவை கொடுத்தால் மட்டுமே அனுப்ப முடியும் என்று கூறிவிட்டதால், ஒரு வாரத்தில் பணத்தை முதியோர் இல்லத்தில் கட்டி மூதாட்டியை மீட்டுள்ளனர். இந்நிலையில், முதியோர் இல்லத்தில் இருந்து மீண்டு வந்ததால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் என் பெயரில் உள்ள சொத்தையும் நான் எழுதிக் கொடுத்த வீட்டையும் மீண்டும் எனக்கே திரும்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் தாய் என்றும் பார்க்காமல் என்னை சித்ரவதை செய்வதால் என் மகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் மூதாட்டி சாந்தகுமாரி புகார் ஒன்றை நேற்று அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மூதாட்டி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags : SP , One crore, daughter who looted property, action, sp, grandmother, complaint
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...