×

அரிசியில் உயிருடன் வண்டு, புழுக்கள் இருந்ததால் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் திடீர் போராட்டம்: பெரியபாளையம் அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ரேஷன் அரிசியில் வண்டு, புழுக்கள் இருந்ததால், ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் அரியப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு, சுமார் 20 வருடங்களாக தனியாருக்கு  சொந்தமான ஓடுபோட்ட  கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதில், அரியப்பாக்கம், எல்லாபுரத்தை சேர்ந்த 350 குடும்பத்தினர் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்குகிறார்கள். இந்நிலையில், நேற்று காலை அரியப்பாக்கம் ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்காக அப்பகுதி மக்கள் வந்தனர்.

அப்போது, ரேஷனில் வாங்கிய அரிசி பழுப்பு நிறத்திலும், உயிருடன் வண்டு, புழு, பூச்சிகள் ஆகியவை இருந்தன. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் அரிசியை கடைகாரரிடமே திருப்பி கொடுத்துவிட்டனர். பின்னர், ‘ஏன் இதுபோன்ற அரிசியை கொடுக்கிறீர்கள்’ என ரேஷன் கடை ஊழியரிடம் கேள்வி ஏழுப்பினர். அதற்கு அவர், ‘கடைக்கு இந்த அரிசி தான் வந்தது அதை நான் இப்போது தான் பிரித்து உங்களுக்கு கொடுக்கிறேன்’ என்றார். இதைக்கேட்ட கோபம் அடைந்த மக்கள் அரிசியை திருப்பி கொடுத்துவிட்டு, ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த ஊராட்சி தலைவர் நிர்மலா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமரசம் செய்து, காக்கவாக்கம் கூட்டுறவு சங்கத்திற்கு தகவல் தெரிவித்தார். அதற்கு, ‘கூட்டுறவு சங்க அதிகாரிகள் நாளை வேறு அரிசி மூட்டைகளை அனுப்பி வைக்கிறோம்’ என்றனர். பின்னர், கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

* மழைக்காலத்தில் அவதி
கிராம மக்கள் கூறுகையில், ‘அரியப்பாக்கம் ரேஷன் கடை தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதில், மழை காலத்தில் கடை உள்ளே பாம்பு, பூச்சி ஆகியவை செல்கின்றன. மேலும், மழையில் கட்டிடம் சேதமடைந்து ஒழுகுகிறது. இதனால் அரிசி, சர்க்கரை மூட்டைகள் நனைந்து விடுகின்றன. எனவே, ரேஷன் கடைக்கு  சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.

Tags : Ration shop ,Periyapalayam ,protest , Beetle alive in rice, worms, ration shop, siege, public, struggle, Periyapalayam
× RELATED ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண்...