7 ஊழல் வழக்குகளில் குற்றவாளி மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப்புக்கு 32 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 7 ஊழல் வழக்குகளில், 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.363 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நஜீப் ரசாக் மலேசிய பிரதமராக இருந்தபோது அரசு நிதியை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, கடந்த பொதுத்தேர்தலில் அவர் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படவும் வித்திட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது மலேசிய ஊழல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், மோசடி செய்த நிதியை ஹாலிவுட் படங்கள் தயாரிப்பு, ஓட்டல்களை விலைக்கு வாங்குதல், நகை என ஆடம்பரமாக செலவு செய்தது தெரிய வந்தது.

அவரது வங்கி கணக்கிற்கு ரூ.525 கோடிக்கும் மேல் பண பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது வங்கி கணக்குகளை அரசு முடக்கியது. ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், மலேசிய நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை நீதிபதி நஜ்லன் கசாலி இரண்டு மணி நேரம் வாசித்தார். அதில், மொத்தமுள்ள 7 ஊழல் வழக்குகளில், ஒன்றில் 12 ஆண்டுகளும், 3 வழக்குகளில் 10 ஆண்டுகளும், மற்ற 3 வழக்குகளில் 10 ஆண்டுகள் என மொத்தம் 32 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தண்டனைகள் அனைத்தையும் ஒருசேர அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால், அதிகபட்சமாக ரசாக் 12 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தால் போதுமானது. மேலும், அவருக்கு ரூ.363 கோடி அபராதமும் விதித்து நீதிபதி கசாலி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ரசாக் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: