×

ஆந்திராவில் நோயாளியை குப்பை வண்டியில் அழைத்துச் சென்ற அதிகாரிகள்

திருமலை: ஆந்திராவில் உடல்நிலை பாதித்தவரை குப்பை வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மேற்கு கோதாவரி மாவட்டம், பீஸ்வரம் கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் தங்கியிருந்தார். கடந்த 2 நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு படுத்தபடி இருந்துள்ளார். இதையறிந்து நேற்று அங்கு வந்த பஞ்சாயத்து அதிகாரிகள், சதீஷ்குமாரை குப்பை அள்ள பயன்படும் வண்டியில் ஏற்றினர். இதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ‘உடல்நிலை சரியில்லாதவரை எதற்காக குப்பை வண்டியில் ஏற்றிச் செல்கிறீர்கள்’ என கேட்டனர். ஆனால், அதிகாரிகள் சரியான பதிலை கூறாமல் மழுப்பினர்.

பின்னர், சதீஷ்குமாரை அக்கிவேடுவிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சதீஷ்குமார் அதிகம் மது குடித்துள்ளதால் அவருக்கு வாயு தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்தனர். பின்னர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்த்து தொடர் சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால், அவர் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பியோடி விட்டார். அவரை தேடும் பணி நடந்து வரும் நிலையில் உடல்நிலை பாதித்தவரை மருத்துவமனைக்கு குப்பை வண்டியில் அதிகாரிகள் அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இது குறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவரை குப்பை வண்டியில் எடுத்துச் செல்ல முக்கிய காரணம் தொலைதூர கிராமமாக இருப்பதால், சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி இல்லாததுதான்,’ என்றனர்.

Tags : patient ,Andhra Pradesh , Andhra, patient, garbage cart, taken away, officers
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...