×

பாபர் மசூதி இடிப்பு வழக்கு வாக்குமூலம் பதிவை முடித்தது நீதிமன்றம்

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரின் வாக்குமூலத்தையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பதிவு செய்து முடித்துள்ளது. பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டில் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் முன்னாள் துணை பிரதமரும், பாஜ முன்னாள் தலைவருமான அத்வானி, பாஜ மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி உள்பட 32 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களிடம் இருந்து  விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை ஜூலை 30ம் தேதிக்குள் பதிவு செய்து முடிக்கும்படி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், ம.பி. முன்னாள் முதல்வர் உமாபாரதி, ஆகியோரின் வாக்குமூலம் சமீபத்தில் பெறப்பட்டது. அதே போல், மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் காணொலி மூலம் வாக்குமூலம் பெறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் கடைசியாக உள்ள ஓம் பிரகாஷ் பாண்டே 15 ஆண்டுகளுக்கு முன் சாமியாராக போனதாகவும், அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, வாக்குமூலம் பதிவது தாமதமாக கூடும் என்பதால் சிபிஐ அவரது பெயரை பட்டியலில் இருந்து ஒதுக்கி வைத்தது. அவரது சொத்துகளை முடக்கவும், எப்போது கைது செய்யப்பட்டாலும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்படியும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டியலில் கடைசிக்கு முந்தியவரும் கடைசியானவருமான முன்னாள் சிவசேனா எம்பி சதீஷ் பிரதானின் வாக்குமூலம் நேற்று பெறப்பட்டது. அப்போது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனது பெயர் இதில் சேர்க்கப்பட்டிருப்பதாக காணொலி மூலம் நடந்த வாக்குமூலம் பதிவில் தெரிவித்தார். இத்துடன் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரது வாக்குமூலத்தையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பதிவு செய்து முடித்துள்ளது.

Tags : court ,Babri Masjid , Babri Masjid, demolition case, confession record, court
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...