×

ஆளுநர் 3 நிபந்தனை விதித்த நிலையில் 31ம் தேதி பேரவையை கூட்ட கெலாட் அரசு மீண்டும் பரிந்துரை: ராஜஸ்தானில் தொடரும் குழப்பம்

ஜெய்ப்பூர்: சட்டப்பேரவை கூட்டத் தொடரை கூட்ட 21 நாட்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டுமென்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை ராஜஸ்தான் மாநில ஆளுநர் விதித்த நிலையில், வரும் 31ம் தேதி முதல் கூட்டத்தொடரை தொடங்க வேண்டுமென கெலாட் அரசு  மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் கெலாட் அரசு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க விரும்புகிறது. இதற்காக சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்த அனுமதி கோரி ஆளுநரிடம் 2 முறை பரிந்துரை கடிதம் அனுப்பியது.

இவற்றை நிராகரித்த ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, சட்டப்பேரவையை கூட்ட வேண்டுமென்றால் 21 நாட்களுக்கு முன்பே தெரிவிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை விதித்துள்ளார். இதனால், ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. ஆளுநர் நிபந்தனை குறித்து விவாதிக்க, ராஜஸ்தான் அமைச்சரவை கூட்டம் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், அமைச்சர் ஹரிஷ் சவுத்ரி கூறுகையில்,, ‘‘சட்டப்பேரவையை கூட்டுவது எங்கள் உரிமை. இந்த விஷயத்தில் ஆளுநர் கேள்வி எழுப்ப எந்த அதிகாரமும் இல்லை. ஆனாலும் அவரது கேள்விகளுக்கு பதிலை தயாரித்துள்ளோம்.

ஜூலை 31ல் கூட்டத்தொடர் தொடங்க வலியுறுத்தி மீண்டும் பரிந்துரைத்துள்ளோம்,’’ என்றார். இதற்கிடையே, காங்கிரசில் இணைந்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் 6 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய பாஜ எம்எல்ஏ மதன் திலாவரின் புகாரை சபாநாயகர் நிராகரித்தது தொடர்பாக அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உடனடியாக அவர் உயர் நீதிமன்றத்தில் புதிய ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எனது குற்றச்சாட்டை நிராகரித்து கடந்த 24ம் சபாநாயகர் முடிவெடுத்தார்.

ஆனால் முடிவெடுக்கும் முன்பாக அவர் என்னிடம் விசாரிக்கவில்லை. எனது தரப்பு கருத்தை கேட்காமலேயே அவர் முடிவெடுத்தது செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என கூறி உள்ளார். கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்டு வென்ற 6 எம்எல்ஏக்கள் அடுத்த ஆண்டில் கட்சியை காங்கிரசுடன் இணைத்தனர். இவர்களின் ஆதரவால்தான் 200 எம்எல்ஏக்கள் கொண்ட அவையில் கெலாட் அரசு 107 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

* ஜனநாயக படுகொலை
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் 6 பேரும் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க கூடாது என அக்கட்சியின் கொறடா  உத்தரவு பிறப்பித்துள்ளார். இது காங்கிரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது டிவிட்டரில், ‘‘அறிவிக்கப்படாத பாஜவின் செய்தித்தொடர்பாளராக பாஜவுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். இது கொறடா உத்தரவல்ல. ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் படுகொலை செய்பவர்கள் தீட்டிய சதி’’ என கூறி உள்ளார்.

* காங்கிரசுக்கு பாடம் புகட்டுவோம்
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், ‘‘2018 தேர்தலுக்குப் பிறகு எங்களின் 6 எம்எல்ஏ.க்களுடன் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தோம். ஆனால், கெலாட் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு, பகுஜன் சமாஜை காங்கிரசுடன் இணைத்தார். இதை எதிர்த்து அப்போது நீதிமன்றம் செல்ல இருந்தோம். ஆனாலும், காங்கிரசுக்கு பாடம் புகட்ட சரியான நேரத்திற்காக காத்திருந்தோம். இனி இந்த விவகாரத்தை விட மாட்டோம். நீதிமன்றம் செல்வோம். உச்ச நீதிமன்றத்தையும் நாடுவோம்,’’ என்றார்.

* வாக்கெடுப்பு பற்றி ‘கப்சிப்’
சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்தி ஆளுநரிடம் கெலாட் அரசு இதுவரை கொடுத்த 2 பரிந்துரை கடித்தத்திலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. அதே போல, நேற்று அளித்த புதிய பரிந்துரை கடிதத்திலும் நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி குறிப்பிடவில்லை.

Tags : chaos ,Govt ,Assembly ,Governor ,Rajasthan , Governor 3 Condition, 31st Assembly, Meeting Golat, Government Re-Nomination
× RELATED வாக்கு எண்ணிக்கை மையமான அரசு...