×

சொப்னா கும்பல் கடத்திய தங்கம் விற்பனை தமிழக பிரமுகர்கள் 2 பேருக்கு தொடர்பு

திருவனந்தபுரம்: சொப்னா கும்பல் கடத்திய தங்கத்தை விற்பனை செய்ததில் தமிழகத்தை சேர்ந்த 2 பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலம் கடத்தப்பட்ட தங்கத்தை நகைக்கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததாக சொப்னா கும்பல் கூறியது. இதை என்ஐஏ நம்பவில்லை. பெரும்பாலும் கடத்தல் தங்கம் தீவிரவாதிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் இருப்பதால்தான் என்ஐஏயும் அதிரடியாக களத்தில் இறங்கியது. சுங்க இலாகா விசாரணையிலும் இதே விவரங்கள்தான் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் கடத்தல் தங்கம் பெரும்பாலும் தமிழகத்தில் உள்ள தீவிரவாக கும்பல்களுக்கு விற்பனை செய்யப்பட்ட விவரம் என்ஐஏ.க்கு கிடைத்துள்ளது. கடத்தலுக்கு துபாயில் உள்ள பைசல் பரீத், சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோர் மூளையாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் பல தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் பைசல் பரீத், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோர் கடத்தல் தங்கத்தை விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த கும்பல் திருச்சியில் ஏற்கனவே தங்கம் விற்றதை என்ஐஏ கண்டுபிடித்துள்ளது.   

இதேபோல் கோவை, மதுரையிலும் தங்கத்தை விற்பனை செய்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தங்க வியாபாரிகள் மட்டுமல்லாமல், தீவிரவாத கும்பல்களுடன் தொடர்புடைய சிலருக்கும் தங்கம் சென்றுள்ளது. இதற்கிடையே தங்கத்தை வாங்கியவர்களில் 2 பேர் சமீபத்தில் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சில வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்ற விவரம் என்ஐஏவுக்கு கிடைத்து இருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க தமிழகத்தில் என்ஐஏவின் தனிப்படை அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

துபாயில் உள்ள பைசல் பரீதை கைது செய்தால் தான் இது தொடர்பாக கூடுதல் விவரம் கிடைக்கும் என்று என்ஐஏ நம்புகிறது. இவருக்கு கேரளா மட்டுமல்லாமல் தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் என்ஐஏவுக்கு கிடைத்து உள்ளனவாம். எனவே பைசல் பரீதை இந்தியா கொண்டு வந்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளில் என்ஐஏ தீவிரமாக இறங்கியுள்ளது.

* சிவசங்கரிடம் 2வது நாளாக விசாரணை
தங்கம்  கடத்தல் வழக்கில் தொடர்பு குறித்து முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரிடம் நேற்று முன்தினம் என்ஐஏ அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். நேற்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து கொச்சி என்ஐஏ அலுவலகம் அருகில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கிய அவர், நேற்று காலை  9.50க்கு என்ஐஏ அலுவலகம் வந்தார். அவரிடம் 10 மணிக்க தொடங்கிய 2வது  நாள் விசாரணை, இரவு 8.30 மணிக்குதான் முடிந்தது.

* சொப்னாவுக்கு 5 நாள் காவல்
தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா, சந்தீப் நாயரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சுங்க இலாகா கொச்சி பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யதது. மனுவை விசாரித்த நீதிமன்றம், 2 பேரையும் ஆக. 1ம் தேதி வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சுங்க இலாகாவுக்கு அனுமதி அளித்தது.

* தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பா?
தங்கம் கடத்தலில் திருவனந்தபுரத்தில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்பு  இருக்கலாம் என என்ஐஏ கருதுகிறது. இது தொடர்பாக என்ஐஏ ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், கடந்த சில மாதங்களில் தூதரகத்துக்கு யார் யார் வந்து சென்றனர் என்ற விபரங்களை சுங்க இலாகாவும் சேகரிக்க தொடங்கியுள்ளது. இதற்காக, கடந்த மார்ச் முதல் ஜூலை 15ம் தேதி வரை கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கும்படி தூதரக உயரதிகாரிக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

Tags : gang ,Tamil Nadu ,personalities , Sopna gang, smuggled gold, sale, 2 Tamil Nadu personalities, contact
× RELATED போதைப்பொருள் வழக்கில் கைதான...