×

தடை உத்தரவை மீறி கொடைக்கானல் வந்த நடிகர்கள் விமல், சூரி மீது போலீசார் வழக்குப்பதிவு

கொடைக்கானல்: கொரோனா ஊரடங்கு காரணமாக, கொடைக்கானல் செல்ல தடையுத்தரவு அமலில் உள்ளது. ஆனால், தடையை மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர்கள் விமல், சூரி மற்றும் சிலர் கொடைக்கானல் வந்துள்ளனர். தடை செய்யப்பட்ட பேரிஜம் வனப்பகுதிக்குச் சென்று ஏரியில் மீன் பிடித்துள்ளனர். தகவலறிந்த வனத்துறையினர் விமல், சூரிக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கவே, வனத்துறை தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்கள் 3 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

எனினும், கொடைக்கானல் நகருக்குள் இ-பாஸ் பெறாமல் வந்து சென்ற நடிகர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பேத்துப்பாறை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், கொடைக்கானல் போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும் நடிகர்களை அனுமதித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் குரல் எழுப்பினர். விசாரணையில் கொடைக்கானலுக்கு தடை உத்தரவு நேரத்தில் நடிகர்கள் இ-பாஸ் இல்லாமல் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கொடைக்கானல் போலீசார், நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது பிரிவு 270ன் படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : Wimal ,actors ,Suri ,Kodaikanal , Kodaikanal, actors Wimal, Suri, police case against violating restraining order
× RELATED நடிகர் சங்க பிரச்சனையில் இரு...