×

அம்பாலா விமான தளத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு ரபேல் விமானங்கள் இன்று இந்தியா வருகை: புகைப்படம், வீடியோ எடுக்க தடை

அம்பாலா: பிரான்சில் இருந்து புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், அரியானாவில் உள்ள அம்பாலா விமான படைத்தளத்தை இன்று வந்தடைகின்றன. இதையொட்டி, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமானங்களை புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி முதலாவது ரபேல் விமானத்தை பிரான்ஸ் அரசிடம் இருந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவை நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்டன. பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து, இவை இன்று  பிற்பகலில் இந்தியா வந்து சேர்கின்றன. அரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு இந்த விமானங்கள் வருவதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான தளத்தை சுற்றி 3 கிமீ தொலைவுக்கு தனியார் டிரோன்கள் பறக்க அம்பாலா மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும், விமான தளத்தை ஒட்டியுள்ள துவுல்கோட், பல்தேவ் நகர், கர்னாலா, பஞ்கோரா ஆகிய கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் அசோக் சர்மா கூறுகையில், ‘‘144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் 4க்கும் மேற்பட்ட நபர்கள் கூட தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், விமானத்தை புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான தளத்தை சுற்றி மக்கள் வர தடை செய்யப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன,’’ என்றார். இந்த 5 விமானங்களும் உடனடியாக இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும்.

ஆனாலும், அதற்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் கொரோனா நிலைமை சீரான பிறகு நடத்தப்படும். இதற்காக அம்பாலா விமானப்படைத் தளத்தில் ரபேல் படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் சீனா தொடர்ந்து வாலாட்டிக் கொண்டிருப்பதால் ரபேல் விமானங்கள் வந்திறங்கிய உடனேயே விமானப்படையில் சேர்க்கப்படுகிறது. இது எந்த நேரத்திலும் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விளக்கேற்றி வரவேற்பு: அம்பாலா தொகுதி பாஜ எம்எல்ஏ அனில் விஜ் அளித்த பேட்டியில், ‘‘விமானங்களை வரவேற்கும் விதமாக தொகுதி மக்கள் அனைவரும் இரவு 7 மணி முதல் 7.30 மணிக்குள் வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்,’’ என்றார்.

* நடுவானில் எரிபொருள் நிரப்பின
பிரான்சில் இருந்து புறப்பட்ட ரபேல் விமானங்கள் 7 மணி நேம் பயணித்து நேற்று முன்தினம் இரவு ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள விமான தளத்தில் தரையிறக்கப்பட்டன. பிரான்சில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வரும் பயண தூரம் அதிகம் என்பதால் நடு வானிலேயே இந்த விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்த விமானங்களுடன் சேர்ந்து பயணிக்கும் பிரான்ஸ் போர் விமானங்கள் மூலமாக இந்த எரிபொருள் நிரப்பும் பணி நடுவானிலேயே செய்யப்பட்டது. இவை ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இன்று காலை புறப்படும் என தகவல்கள் கூறுகின்றன. வானிலையை பொறுத்து விமானங்கள் புறப்படும் என்பதால் இந்தியா வந்து சேரும் சரியான நேரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

Tags : flights ,India , Ambala Airport, increased security, Rafael flights, today, India visit, photo, video, ban
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...