×

கொரோனா பாதிப்பில் உலகளவில் 2ம் இடம் நோக்கி வேகம் 15 லட்சத்தை கடந்தது இந்தியா: தினமும் 5 லட்சம் பரிசோதனை

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 15 லட்சத்தை கடந்தது. இதே வேகத்தில் தொற்றின் வேகம் சென்றால், அடுத்த 2 அல்லது 3 வாரத்தில் உலகளவில் 2வது இடத்துக்கு செல்லும் அபாயம் உருவாகி இருக்கிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி விவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 9 லட்சத்து 52 ஆயிரத்து 743 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர். 4 லட்சத்து 96 ஆயிரத்து 988 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 33,425 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 47,703 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 654 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளன. நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 14 லட்சத்து 83 ஆயிரத்து 156 பேர் தொற்றினால் பாதித்துள்ளனர். மோசமாக பாதிக்கப்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 27ம் தேதி மட்டும் ஒரே நாளில் 5 லட்சத்து 28 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 26ம் தேதி 5.15 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 27ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் ஒரு கோடியே 73 லட்சத்து 34 ஆயிரத்து 885 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை 14.83 லட்சமாக இருந்த மொத்த பாதிப்பு எண்ணிக்கை, நேற்றிரவு 15 லட்சத்தை கடந்தது.

* இறப்பு விகிதம் குறைகிறது
இந்தியாவில் பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக கொரோனாவால் பதிவாகும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  நாட்டின் இறப்பு விகிதம் தற்போது 2.28 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் 64 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.

Tags : India , Corona exposure, 2nd in the world, towards, 15 lakhs, India, 5 lakhs daily, test
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!