×

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிப்பு? மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இன்று மாவட்ட கலெக்டர்களுடனும், நாளை மருத்துவ நிபுணர்களுடனும் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இந்த கட்டுப்பாட்டை முறையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கடந்த மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 6 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த ஒரு மாதமாக பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த மே மாதத்துக்கு பிறகு கடைகள் திறக்கலாம், தொழிற்சாலைகள் இயங்கலாம், ஆட்டோ, டாக்சி ஓடலாம், அரசு-தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பு, அடிக்கடி சோப் போட்டு கை கழுவுதல் என்று பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், பொதுமக்கள் அதை பின்பற்றாததால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தினசரி புதுபுது கட்டுப்பாடுகளை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் எந்த நிலையில் உள்ளது, இனிமேல் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசுவார்கள். முக்கியமாக, தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா அல்லது புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும். இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு என்பதற்கு பதில், அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிப்பது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவெடுக்கலாம் என்று முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் தினமும் 7 ஆயிரத்தை நெருங்கியபடியே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், மதுரை, தேனி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பல மாவட்ட கலெக்டர்கள் முதல்வர் எடப்பாடியிடம் வலியுறுத்துவார்கள் என்றே கூறப்படுகிறது.

இன்று மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி முடிக்கும் முதல்வர் எடப்பாடி, நாளை காலை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். கடைசியாக கடந்த ஜூன் 24ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் சென்னையில் ஆலோசனை நடத்தினார். அப்போது அறிக்கை அளித்த மருத்துவ குழுவினர், ஊரடங்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சரியான தீர்வு ஆகாது. ஊரடங்கு என்பது, பெரிய ேகாடாரியை வைத்து கொசுவை அழிப்பது போன்றது. அதனால் ஊரடங்கை தவிர்த்து, அரசு மாற்றி யோசிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியது. ஆனாலும், அரசு பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கை அறிவித்தது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

தற்போது, ஊரடங்கு முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் என்ன முடிவை தமிழக அரசு அறிவிக்கும் என்பதில் பொதுமக்களும், முக்கியமாக வணிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று மாவட்ட கலெக்டர்கள், நாளை மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு, நாளை மாலை முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் மாதமும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

ஒரு சில மாவட்டங்களில் மட்டும், அந்தந்த மாவட்டத்துக்குள் பேருந்து செல்ல அனுமதிக்கப்படும். தியேட்டர்கள், பெரிய மால்கள், நீச்சல் குளங்கள் திறக்க வாய்ப்பு இல்லை. பள்ளி, கல்லூரிகளும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட மாட்டாது. உடற்பயிற்சி கூடங்களில் குறைந்த அளவு எண்ணிக்கையில் அனுமதி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் கோயில்களும் திறக்கப்பட மாட்டாது. தற்போது, கடைகள் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது. டீக்கடைகளில் உட்கார்ந்து டீக்குடிக்கவும், ஓட்டல்களில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற சின்ன சின்ன தளர்வுகளுடன், ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை தமிழகத்தில் தொடர்ந்து நீட்டிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக தமிழக அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்.
* 6 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிப்பு.
* மே மாதத்துக்கு பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
* சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு.
* இன்று கலெக்டர்களுடனும், நாளை மருத்துவக் குழுவினரிடம் முதல்வர் ஆலோசனை.
* நாளை மாலை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.
* ஒரு சில மாவட்டங்களில் மட்டும், அந்தந்த மாவட்டத்துக்குள் பேருந்து செல்ல அனுமதிக்கப்படும். தியேட்டர்கள், பெரிய மால்கள், நீச்சல் குளங்கள் திறக்க வாய்ப்பு இல்லை.
* தற்போது, கடைகள் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது.

Tags : Edappadi ,Tamil Nadu ,Corona ,District Collectors , In Tamil Nadu, corona spread, one month, curfew extension ?, District Collector, Chief Minister Edappadi, today, consultation
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...