×

அரியனூர் ஊராட்சி பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் மின்சார கம்பம்

செய்யூர்: மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரியனூர் ஊராட்சியில் உள்ள காலனியில் 500க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த 20 வருடத்துக்கு முன் அமைக்கப்பட்ட மின்கம்பிகள் மற்றும் கம்பங்கள் தற்போது சேதம் அடைந்துவிட்டது. பெரும்பாலான வீடுகளின் மாடியை உரசிக்கொண்டு வயர்கள் செல்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மழை பெய்யும்போது ஷாக் அடிக்கிறது. பல பகுதிகளில் கைக்கு எட்டும் தூரத்தில் மின் வயர்கள் தொங்குவதால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. காலனி பகுதியில் உள்ள குடிசை வீடுகள் மீதும் ஒயர்கள் உரசியபடி செல்வதால் மழைக்காலம், காற்று வீசும்போது வயர்கள் உரசி தீப்பொறிகள் ஏற்பட்டு குடிசைகள் எரிந்துவிடுகிறது.

மின்வயர்களை மாற்றியமைக்க வேண்டும் என்று மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்கள் பலகட்ட போராட்டம் நடத்தியதின் விளைவாக மின் கம்பங்களை மாற்றியமைக்க கடந்த மாதம் மின்வாரியம் காசோலை வழங்கியுள்ளது. ஆனால் ஒரு மாதத்துக்கு மேலாகியும் மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணிகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மின்கம்பத்தால் விபரீதம் நடப்பதற்குள் மாற்றியமைக்க வேண்டும் என்று மின்வாரியத்துக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  



Tags : Ariyanur Panchayat, Electric Pole
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...