×

இ-பாஸ் கட்டாயத்தினால் வியாபாரிகள் வருகை இல்லை: ஈரோடு ஜவுளி சந்தை விற்பனை பாதிப்பு

ஈரோடு: இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வியாபாரிகள் வருகை இல்லாததால் மொத்த விற்பனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில்லரை விற்பனையும் மந்தமாக நடப்பதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பின்பற்றப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிச்சந்தை விதிமுறைகளுடன் செயல்பட மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த சந்தையில் 340 தினசரி கடைகளும், 700க்கும் மேற்பட்ட வாரச்சந்தை கடைகளும் செயல்பட்டு வருகிறது.

இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடக்கும் சந்தையில் வியாபாரிகள் அவர்கள்  உற்பத்தி செய்த ஜவுளி ரகத்தையும், கொள்முதல் செய்த ஜவுளி ரகத்தையும் மொத்த விலையில் விற்பனை செய்வர். இதனால், இந்த ஜவுளி சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளிமாநில வியாபாரிகளும், தமிழகத்தின் பிற மாவட்ட வியாபாரிகள், மக்களும் நேரடியாக வந்து ஜவுளி ரகங்களை கொள்முதல்  செய்து செல்வது வழக்கம். ஆனால், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஜவுளி சந்தையில் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், பிற மாநிலத்தினர் தமிழகத்திற்குள் வரவும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு  ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகளும், பிற மாவட்ட வியாபாரிகளின் வருகை  முற்றிலும் குறைந்து விட்டது. இந்நிலையில், ஈரோட்டில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வெளி மாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை இல்லாததால் மொத்த விற்பனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
சில்லரை விற்பனை ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தை உள்ளூர் வியாபாரிகள் மூலம் 10 முதல் 15 சதவீதம்  நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : traders ,Erode , E-Pass, Merchants, Erode Textile Market, Sales Impact
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...