×

கோவில்பட்டி நீதிபதியை போலீஸ் அவதூறாக பேசிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ.டி

தூத்துக்குடி: கோவில்பட்டி நீதிபதியை போலீஸ் அவதூறாக பேசியது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். கடந்த மாதம் சாத்தன்குளத்தில் தந்தை - மகன் போலீசாரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்திருந்தது. இந்த விசாரணையின் போது பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இடைகாலமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை செய்து ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் உட்பட 10 காவலர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. இதேபோல் இந்த வழக்கை நீதி விசாரணை செய்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் கோவில்பட்டியில் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் நீதி விசாரணை செய்திருந்தார்.

அப்போது காவலர்கள் அவரை அவதூறாக பேசியது சம்பந்தமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை, அந்த வழக்கையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்து இரண்டு வழக்கையும் விசாரணை செய்து வருகின்றது. இந்த வழக்கு குறித்து சிபிஐ மற்றும் சிபிசிஐடி இருவரும் நிலை அறிக்கை தாக்கல் செய்ய கடந்த விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி போலீசார் தங்களுடைய முழு விசாரணை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால் சிபிஐ தரப்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. தொடர்ந்து, இடைக்கால அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினர். அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், விசாரணைக்கு டெல்லியில் இருந்து வந்த சிறப்பு குழுவினர் தற்போது கொரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பில் உள்ளனர். ஆகையால் அறிக்கை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு 2 வாரக்கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கைவைத்திருந்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து 2 வாரக்கால அவகாசம் வழங்கி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : judge ,Kovilpatti , Kovilpatti Judge, Police, C.P.C.I.D.
× RELATED யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கில்...