×

“ஒரு கண்ணில் வெண்ணெய் .. மறு கண்ணில் சுண்ணாம்பு” என்ற அடிப்படையில் காவல்துறை அணுகுவதை கைவிட வேண்டும்! : மார்க்சிஸ்ட் கட்சி அறிக்கை

சென்னை : “ஒரு கண்ணில் வெண்ணெய் .. மறு கண்ணில் சுண்ணாம்பு” என்ற அடிப்படையில் காவல்துறை அணுகுவதை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை கடைபிடித்து வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. பீமா கோரேகான் செயல்பாட்டாளர்கள் கைது, தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் போன்றவற்றை அண்மைக்கால உதாரணங்களாக கூறலாம்.

சங்பரிவாரத்தினர் மீது கொடுக்கப்படும் புகார்களை காவல்துறையினர் முறையாக கையாள்வது இல்லை. சமூக செயல்பாட்டாளர் பேராசிரியர் சுந்தரவல்லி மீது அள்ளித் தெளிக்கப்படும் ஒவ்வோர் அவதூறு மீதும் அவர் புகார் அளித்திருக்கிறார். இதேபோல கடந்த காலத்தில் பெண் பத்திரிகையாளர்கள், பெண்கள் இயக்கத் தலைவர்கள் மீது சமூக வலைத்தளத்தில் போடப்பட்ட படு ஆபாசமான பதிவுகள் குறித்தும் புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் எதன் மீதும் சிறு அசைவு கூட இல்லை. அதேசமயம் சங்பரிவாரத்தினர் அளிக்கும் புகார்கள் மட்டும் மிகுந்த கவனத்தோடும், அவசரத்தோடும் அதீதமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாகவே கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை பார்க்க வேண்டும்.

கருப்பர்  கூட்டத்தின் சர்ச்சைக்குரிய காணொளியை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி ஏற்கவில்லை. விமர்சனத்துக்கும் இழிவுபடுத்தலுக்கும் இடையே வேறுபாடு உண்டு. அந்த எல்லையை மேற்கண்ட காணொளி மீறி இருக்கிறது.பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்த பின்னணியில்,  அந்நிறுவனம்  வருத்தம் தெரிவித்ததோடு, அந்த காணொளியையும் நீக்கிவிட்டார்கள்.அதன் பிறகும் பல்வேறு பிரிவுகளின் மீது வழக்கு, குண்டர் சட்டம், அலுவலகம் முடக்கம், அனைத்து காணொளிகளும் முடக்கம் என்பதோடு, உச்சகட்டமாக  எடிட்டர் சுந்தரை கைது செய்வதற்கு, அவருடைய மனைவியை சட்டவிரோதமாக  பணயக் கைதியாக காவல் நிலையத்தில் பிடித்து வைக்கும் அளவுக்கு காவல்துறை போயிருக்கிறது.இதற்கு முன்பும் மதக் கோட்பாடுகளை இழிவு படுத்தியதற்காக ஒரு சிலர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. பொதுவாக குண்டர் சட்டம் போடப்பட்ட வழக்குகள் குறித்து பரிசீலிப்பது எதிர்காலத்தில் அத்து மீறல்களை தடுக்க உதவும்.

சட்டத்தின் அடிப்படையில்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அல்ல. எனவே கருப்பர் கூட்டம் சேனலின் மீது, நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து எடுக்கப்பட்டுள்ள அதீத நடவடிக்கைகளைக் கைவிட்டு, சட்ட வரையறைக்கு உட்பட்ட அணுகுமுறையை காவல்துறை கையாள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் சங்பரிவாரத்தினரையும், அவர்களிடம் இருந்து மாறுபட்டு நிற்கும் செயல்பாட்டாளர்களையும் “ஒரு கண்ணில் வெண்ணெய் .. மறு கண்ணில் சுண்ணாம்பு” என்ற அடிப்படையில் அணுகுவதையும் காவல்துறை கைவிட வேண்டும் என்று அழுத்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது.

Tags : Police, Marxist, Party, Report
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...