×

கொரோனா பரவலால் 2021 ஜூலை வரை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கூகுள் நிறுவனம் அனுமதி

நியூயார்க்: கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 2021 ஜூலை வரை அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்து பணியாற்றும்படி தனது ஊழியர்களை கூகுள் கேட்டுக் கொண்டுள்ளது. தி வாசிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகியவை வெளியிட்ட செய்தியில், ஸ்னாப் நிறுவனம் தரப்பில் செப்டம்பர் வரை வீட்டில் இருந்து பணியாற்ற அளிக்கப்பட்ட அனுமதி ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும், அமேசான் கார்ப்பரேட் ஊழியர்களும் 2020 முழுமைக்கும் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு 2020 முழுமைக்கும் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க திட்டமிட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறைகள் முழுவதும் முடங்கியுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பு முடிவுக்கு வரும் வரை தொழில்நுட்ப பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்தபடியே பணிபுரிய அனைத்து நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இதனை தொடர்ந்து கூகுள், அமேசான் உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் தற்போது வீட்டில் இருந்தவாரே பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தங்கள் ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாத இறுதி வரை வீட்டிலிருந்தபடியே பணியாற்றலாம் என தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அந்நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தலைமையில் நடைபெற்ற உயர் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : home ,Corona ,spread , Google, Corona
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு