×

மும்பையில் 100 நாட்களுக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக குறைவு..: மகிழ்ச்சியான செய்தி என ஆதித்ய தாக்கரே ட்வீட்

மும்பை: மும்பையில் 100 நாட்களுக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக குறைந்துள்ளது மகிழ்ச்சியான செய்தி என ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார். உலக அளவில் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. இதில் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 47,703 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 14,83,156 ஆக உயர்ந்துள்ளது. இதே போல கடந்த 24 மணி நேரத்தில் 654 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை  33,425 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வந்தாலும், மும்பையில் 100 நாட்களுக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக ஒரு நாளில் 700 என்ற அளவில் குறைந்துள்ளது.

மும்பையை பொறுத்தவரை கடந்த 100 நாட்களாகவே தினந்தோறும் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது அங்கு கொரோனா பரவல் குறைந்து வருகிறது. 24 மணிநேரத்தில் நடந்த சோதனையில் 700 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சரும், முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே, மகிழ்ச்சியான செய்தி. மும்பையில் இன்று 700 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகமானோருக்கு ஏறக்குறைய 8776 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தபோதிலும் குறைவான பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு நிம்மதி ஏற்பட்டுள்ளது. எனினும் கட்டுப்பாடுகளை விலக்கி விட வேண்டாம். முககவசத்தையும் விட்டுவிட வேண்டாம். எண்ணிக்கையை மட்டுமே நாம் குறைக்க வேண்டும், என கூறியுள்ளார்.


Tags : Corona ,Aditya Thackeray ,Mumbai , Mumbai, Corona virus, Aditya Thackeray
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...