×

கொரோனா ஏற்படுத்தும் பரிதாப மரணங்கள்!: கர்நாடகத்தில் கொரோனா பயத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் பாம்பு கடித்த இளைஞர் பலி..!!

பெங்களூரு: பாம்பு கடிபட்ட 20 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாததால் மருத்துவர்களால் புறக்கணிக்கப்பட்டு சில நிமிடங்களில் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை பிழியும் இச்சம்பவம் கர்நாடக மாநிலம் விஜய்ப்பூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வைரஸ் பரவலின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியிருக்கிறது.  கர்நாடகாவில் ஒருபுறம் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பொதுமக்களுக்கு தேவையான ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக பலத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞர் ஒருவர் சுவாசக்கோளாறு பிரச்சனை ஏற்பட்டு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில், விஜய்ப்பூர் மாவட்டத்தில் பாம்பு கடிபட்ட இளைஞர் ஒருவர் நேற்று சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாத காரணத்தினால் மருத்துவர்கள் இளைஞருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த இளைஞர் சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இளைஞரின் சடலத்துடன் உறவினர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல பல மரணங்கள் கர்நாடகாவில் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் தனியார் மருத்துவமனையிலும் கோவிட் பரிசோதனை செய்யாதவர்களுக்கு வேறு எந்த சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்படுவதில்லை என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து கர்நாடக அரசு புதிதாக ஒரு சட்டத்தை இயற்றியிருக்கிறது. அதில் தனியார் மருத்துவமனைக்கு ஒருவர் அவசர சிகிச்சைக்கு வரும் போது கோவிட் பரிசோதனை செய்யப்படாமல் இருந்தாலும் அவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : deaths ,Corona ,doctor ,corona panic , snake bite , corona panic,Karnataka
× RELATED பூசணி விதையின் பயன்கள்!