×

உலகின் புலிகள் எண்ணிக்கையில் 70 விழுக்காடு இந்தியாவில் உள்ளது: மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

புதுடெல்லி: உலகில் உள்ள புலிகள் எண்ணிக்கையில் எழுபது விழுக்காடு இந்தியாவில் உள்ளதாக மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.  புலிகள் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2010ல் ஒன்று கூடி, 2022ம் ஆண்டிற்குள் உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக பெருக்குவது என்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இது புலிகள் பாதுகாப்புக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. அதே கூட்டத்தில், ஆண்டுதோறும் ஜூலை 29ம் தேதியை உலகப் புலிகள் தினமாகக் கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மத்திய அரசு, நமது நாட்டில் உள்ள புலிகள் எண்ணிக்கையை கேமரா மூலம் கண்காணித்து கணக்கெடுத்து வருகிறது.

உலகிலேயே மிகப்பெரிய அளவில் கேமரா மூலம் புலிகளைக் கண்காணித்து கணக்கெடுப்பதில் இந்தியா கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. இதையடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த சாதனையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த நிகழ்ச்சி, இன்று புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், உலகப் புலிகள் நாளை முன்னிட்டு இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு குறித்த விரிவான அறிக்கை இடம்பெற்றுள்ள நூலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர் 1973ம் ஆண்டில் இந்தியாவில் 9 புலிகள் காப்பகம் இருந்ததாகவும், இப்போது 50 காப்பகங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் 30,000 யானைகளும், மூவாயிரம் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும், 500 சிங்கங்களும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.



Tags : Prakash Javdekar ,India ,world ,tiger population ,Central , Atmospheric Overlay Cyclone, Heavy Rain, Chennai Meteorological Tigers, Number, India, Central Environment Department, Minister Prakash Javadekar
× RELATED உலக உடல் பருமன் விழிப்புணர்வு