×

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வருமானம் குறைந்த ரயில் நிலையங்கள் பட்டியல் தயார்

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வருமானம் குறைவான ரயில் நிலையங்களின் பட்டியல் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. ஊரடங்கிற்கு பின்னர் மதுரை கோட்ட அதிகாரிகள் முடிவெடுத்து அறிக்கை அனுப்ப உள்ளனர். ‘கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் ரயில்கள் இயக்கம் தடைபட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் சென்னை நீங்கலாக முக்கிய நகரங்களை மையமாக வைத்து 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அவையும் ஜூலை மாதத்தில் நிறுத்தப்பட்டுவிட்டன. இந்நிலையில் ஊரடங்கு முடிவுக்கு பின்னர் ரயில்களை இயக்கிட ரயில்வே துறை சில புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.

அதன்படி நாடு முழுவதும் வருமானம் இல்லாத 6 ஆயிரம் ரயில்வே நிறுத்தங்களை கைவிட முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில்கள் முன்பு போலவே இயங்கினாலும், வருமானம் குறைந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் செல்லும். அந்தவகையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வருமானம் குறைவான ரயில் நிலையங்கள் குறித்த பட்டியல் ஏற்கனவே தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. நெல்லை- செங்கோட்டை மார்க்கத்தில் கீழப்புலியூர், காருக்குறிச்சி, கீழஆம்பூர் உள்ளிட்ட ஓரிரு ரயில் நிலையங்களும், நெல்லை- நாகர்கோவில் மார்க்கத்தில் மேலப்பாளையம், செங்குளம் உள்ளிட்ட ரயில் நிலையங்களும், நெல்லை- திருச்செந்தூர் மார்க்கத்தில் தாதன்குளம், கச்சனாவிளை உள்ளிட்ட நிலையங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை, கைலாசபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களும் வருமானம் குறைவு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

குரும்பூர் அருகே வனதிருப்பதி கோயிலுக்கு செல்பவர்கள் கச்சனாவிளை ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து பயணிக்கின்றனர். இந்நிலையில் ரயில்வே துறையின் திடீர் முடிவால் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். ஊரடங்கிற்கு பின்னர் நாடு முழுவதும் ரயில்வே துறையின் புதிய திட்டம் அமலுக்கு வந்தால், இந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்பது சந்தேகமே. இப்பட்டியலில் விடுபட்ட ரயில் நிலையங்கள் மற்றும் சேர்க்க வேண்டிய ரயில் நிலையங்கள் குறித்து மதுரை கோட்ட அதிகாரிகள் வருவாயை கணக்கில் கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால் இத்திட்டத்திற்கு ரயில் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த அந்தோணி கூறுகையில், ‘‘பயணிகள் ரயில்கள் பெரும்பாலும் சேவை அடிப்படையிலே இயக்கப்படுகின்றன. அவற்றால் ரயில்வேக்கு லாபம் அதிகளவில் கிடைக்க வாய்ப்பில்லை. ரயில்வே துறை சில தடங்களை தனியார்மயமாக்கி லாபம் பார்க்க துடிக்கிறது. மற்றொரு பக்கம் பயணிகள் ரயில் சேவையிலும் கை வைக்க பார்க்கிறது. வருமானம் குறைவான இடங்களில் ரயில் நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டால் குக்கிராம மக்கள் சிரமங்களுக்கு உள்ளாவர். எனவே பயணிகள் ரயிலின் அனைத்து நிறுத்தங்களும் முன்பு போல இருக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது’’ என்றார்.

Tags : Thoothukudi ,Tenkasi ,railway stations ,Nellai , Nellai, Tenkasi, Thoothukudi, Revenue, Stations
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...