×

மீண்டும் தற்காலிக காய்கறி சந்தை அமைக்க வடசேரி பஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் பணி தீவிரம்: 166 சிறு கடைகள் அமைகின்றன

நாகர்கோவில்: வடசேரி பஸ் நிலையத்தில் மீண்டும் தற்காலிக காய்கறி சந்தை அமைக்க  சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி சந்தையில், கொரோனா புகுந்து, 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து  கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தற்காலிக காய்கறி சந்தையும் மூடப்பட்டது. இந்த நிலையில் வியாபாரிகளின் நலன் கருதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன், தற்காலிக காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்பட உள்ளது. போதிய இடைவெளிகளுடன் கடைகள் அமைக்கப்பட வேண்டும். மார்க்கெட்டுக்குள் வரும் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை சோதனை நடத்தப்பட வேண்டும். முக கவசம் இல்லாமல் யாரையும் அனுமதிக்க கூடாது.

சானிடைசர் கொடுக்கப்பட வேண்டும். எந்த வாகனங்களும் உள்ளே வர அனுமதியில்லை என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதற்கு வியாபாரிகள் தரப்பில் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து வடசேரி பஸ் நிலையத்தில் மீண்டும் தற்காலிக காய்கறி சந்தைக்கான கடைகளுக்காக, அளவீடு செய்து சமூக இடைவெளிகளை கடைபிடிக்கும் வகையில் நம்பர்கள் போடப்பட்டுள்ளன. மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் மாநகராட்சி பணியாளர்கள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். தற்காலிக சந்தையில் 166 கடைகள் வரை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பஸ் நிலையம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது. இந்த பணிகள் நேற்று காலை தொடங்கின. சுமார் 1 மாதமாக மூடி கிடப்பதால், தற்காலிக சந்தையில் உள்ள குப்பைகளை அகற்றினர். ஏற்கனவே கிடந்த காய்கறி மூடைகளும், பொருட்களும் அகற்றப்பட்டன. கிருமி நாசினி தெளித்து, முழுவதும் சுத்தம் செய்யப்பட்டவுடன், வியாபாரிகள் கடைகள் அமைப்பதற்கான கூடாரங்களை அமைப்பார்கள். இந்த பணிகள் முடிந்து இன்னும் சில நாட்களில் தற்காலிக காய்கறி சந்தை, வடசேரி பஸ் நிலையத்தில் மீண்டும் செயல்படும் என தெரிகிறது.

ஆணையர் ஆய்வு
ஆணையர் ஆஷா அஜித் நேற்று காலை வடசேரி பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் தூய்மை பணியை பார்வையிட்டார். பிளாட்பாரங்கள், அங்கு அமைக்கப்பட்டு இருந்த இருக்கைகள் அனைத்தையும் முழுமையாக சுத்தம் செய்ய உத்தரவிட்டார். நம்பர் குறிப்பிட்டுள்ள இடங்களில் தான் கடைகள் அமைக்கப்பட வேண்டும். விதிமுறை மீறினால் கடைகள் அமைக்க அனுமதி கிடையாது. தற்காலிக கடைகள் கட்டி முடிக்கப்பட்ட பின், அதை ஆய்வு செய்து பின்னர் சந்தை திறக்க அனுமதி கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Tags : shops , egetable market, Vadacherry bus stand, 166 small shops
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!