×

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டில் திருத்தம்: தமிழகம் முழுவதும் நெடுவாசலாக மாறும்

திருச்சி: கொரோனா முடக்கத்தை சாதகமாக பயன்படுத்தி மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டில் கொண்டு வரும் திருத்தத்தால் தமிழகம் முழுவதும் நெடுவாசலாக மாறும், விவசாயத்தை அழிக்க நினைத்தால் போராட்டம் வெடிக்கும் என விவசாய சங்கங்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில், மத்திய அரசு சமீபத்தில் மேலும் சில திருத்தங்களை செய்து, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு 2020 என்ற வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பை ெதரிவித்துள்ளன. மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்  ஜெயராமன்:  தமிழகத்தில் 700 இடங்களில் ஓஎன்ஜிசி  எண்ணெய் குழாய்களை பதித்துள்ளது. மக்கள் கருத்து கேட்பதற்கான வாய்ப்பு இருந்தே இந்த நிலை  ஏற்பட்டுள்ளது.

11 ஆயிரம்  சதுர கிலோ மீட்டர் பரப்பில் நிலம் மற்றும் கடற்கரையில் புதிதாக ஹைட்ரோ  கார்பன் திட்டங்களுக்கு வேதாந்தா, ஓஎன்ஜிசி உள்ளிட்ட எண்ணெய்  நிறுவனங்கள் ஏலம் எடுத்துள்ளது. எதிர்ப்பு  கிளம்பியதால்  மக்களிடம் கருத்து கேட்காமலே திட்டத்தை  நிறைவேற்ற  வழி செய் ய இந்த திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனால் மக்களின்  எதிர்காலம், நாட்டின் வளம் பாதிக்கும்.  தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன்:  நீதிமன்றங்களின் தலையீடுகளை தடுத்து நிறுத்திடவும், மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்படாமலே எந்தவொரு திட்டத்தையும் ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள் செயல்படுத்தக்கூடிய வகையில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநில அரசுகளின் உரிமையும் பறிபோகும். மக்களின் குரல் வலையை நெரித்து முதலீட்டை முதன்மைப்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். கருத்துக் கேட்புக்கான கால அவகாசத்தை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை நீட்டிக்க வேண்டும். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு: கொரோனா காலத்தில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மத்திய அரசு மக்களை மிரட்டிவிட்டு புதிய சட்டங்களை சத்தமின்றி அமல்படுத்தி வருகிறது. கொலை குற்றவாளியிடம் கூட அவரது கருத்தை கேட்டுதான் தண்டனை வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது.ஆனால் நாட்டையும், சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒரு சட்டத்தை திருத்தம் செய்ய மக்களிடம் கருத்து கேட்பதை தவிர்க்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சட்டங்களை நிறைவேற்றினால் போராட்டம் வெடிக்கும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் விசுவநாதன்:  சுற்றுசூழல் பாதுகாப்புதுறை சட்ட திருத்தம் மத்திய அரசு கொண்டு வந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பிறகு தமிழக முதல்வர் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்படும் என அறிவித்தார். கொரோனா வைரஸ் காலத்தில் அதனை கண்டு கொள்ளாததால் தற்போது மத்திய அரசு மூலம் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் இது போன்ற சட்டத்தை கொண்டுவர விடக்கூடாது.

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் புதுக்கோட்டை தனபதி: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய சுற்றுச்சூழல் சட்ட திருத்தம், மக்களை விட்டுவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. மத்திய அரசு விரும்பும் இடமெல்லாம் நெடுவாசலாக மாறும். எங்கெல்லாம் வளங்கள் தெரிகிறதோ அங்கெல்லாம் தொழிற்சாலைகளை நிறுவுவார்கள். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். திட்டம் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் வீடுகளில் கருப்புகொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* மக்கள் நலனுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் இந்த திருத்தம் உள்ளது. கொரோனா காலத்தில் நிறைவேற்ற
மத்திய அரசு முயற்சிக்கிறது.

* மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையால், தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.

* கொரோனா முடக்கத்தை சாதகமாக பயன்படுத்துவதா?
* விவசாய சங்கங்கள் கடும் எச்சரிக்கை
* விவசாயத்தை அழிக்க நினைத்தால் போராட்டம் வெடிக்கும்

Tags : Tamil Nadu , Environment, Tamil Nadu, Neduvasal
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...