×

நான்குவழிச்சாலையின் நடுவில் பராமரிப்பின்றி கருகும் செடிகள்

பரமக்குடி: மதுரையிலிருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையின் நடுவில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக நடப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் விடாததால் தற்போது கருகி வருகிறது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு முக்கிய இடங்களை நகரங்களை இணைப்பதற்காக நான்கு வழி மற்றும் ஆறு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை சார்பாக இந்துக்களின் புனித ஸ்தலமான ராமேஸ்வரத்தை இணைக்கும் விதமாக முதல்கட்டமாக மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலும் ரூ.960 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, 56 கோடி ரூபாய் செலவில் பரமக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வரை சாலையின் இருபக்கங்களிலும் 10 அடி விரிவுபடுத்த பணிகள்  நடைபெற்று முடிந்துள்ளது. பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையின் நடுவில் இரண்டு சாலைகளை பிரிக்கும் பகுதியில் வாகன ஓட்டிகளின் கண் கூச்சத்தை தவிர்ப்பதற்காக செடிகள் வளர்க்கப்பட்டு மத்திய நெடுஞ்சாலை துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பார்த்திபனூரிலிருந்து  பரமக்குடி வரையிலான சாலையின் நடுவில் நடப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாமலும், முறையான பராமரிப்பு செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் செடிகள் கருகி வெறும் கம்புகள் மட்டுமே காட்சியளிக்கிறது.

இதனால் நான்கு வழிச்சாலையில் வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு எதிரில் வரும் வாகனங்களின் வெளிச்சம் அடிப்பதால் இரவு நேரங்களில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. சாலையை பயன்படுத்துவதற்காக வாகன ஓட்டிகளிடம் சுங்கச்சாவடி என்ற பெயரில் பணம் பறிக்கும் ஒப்பந்ததாரர்கள் முறையாக செடிகளை பராமரிக்காமல் விட்டுவிட்டதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து டிரைவர் சிவா கூறுகையில், ‘மதுரையிலிருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையில் இடையில் அமைக்கப்பட்டுள்ள செடிகள் பராமரிப்பின்றியும், தண்ணீர் விடாமலும்  கருகிவிட்டது. இதனால், இரவு நேரங்களில் வாகனங்களை இயக்க முடியவில்லை.

மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை இரு  இடங்களில் சுங்கச்சாவடி என்ற பெயரில், ரூ.150  வசூல் செய்யும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் முறையாக சாலைகளையும், செடிகளையும் பராமரிக்காமல் உள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் வாகன ஓட்டிகளின் உயிரை காப்பாற்றும் விதமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரிசெய்து, செடிகள் வளர்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என்றார்.



Tags : road , Four-lane, plants
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...