×

பாகிஸ்தானில் குருத்வாராவை மசூதியாக மாற்றுவதற்கு இந்தியா கடும் கண்டனம் : சிறுபான்மை சமூகத்தின் மத உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தல்!!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பிரசித்தி பெற்ற குருத்வாராவை மசூதியாக மாற்றும் முயற்சிக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் லாகூர் நகரில் நெளலகா பஜாரில் உள்ள ஒரு பிரபலமான ஷைதி அஸ்தான் என்ற  குருத்வாரா உள்ளது. சீக்கியர்களின் புனித இடமாக கருதப்படும் இந்த குருத்வாராவிற்கு அருகில் மஸ்ஜித் ஷாஹித் கஞ்ச் என்ற மசூதி ஒன்று உள்ளது. ஆனால் இந்த குருத்வாரா அமைந்துள்ள பகுதி, மசூதிக்கு சொந்தமான இடம் என்றும் அந்த குருத்வாராவை மசூதியாக மாற்றும் முயற்சிகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த முயற்சிக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, சம்பந்தப்பட்ட குருத்வாரா சீக்கியர்களின் புனித தலமாக நெடுங்காலமாக வழிபாடு நடத்தப்பட்டு வருவதாகவும் இதனை மசூதியாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ள கூடாது என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,சிறுபான்மை சமூகத்தின் மக்களின் பாதுகாப்பு, அவர்களின் மத உரிமைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாக்கவும் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இது தொடர்பாக பாகிஸ்தான் ஹைகமிஷனிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது, என்றார். சீக்கிய சமூகத்தினர், குருத்வாராக்களை மிகவும் புனிதமானதாக கருதுகின்றனர். தற்போது குருத்வாராவை மசூதியாக முயற்சிக்கும் செயல் இந்தியாவில் மிகவும் தீவிர அக்கறையுடன் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் சிறுபான்மை சீக்கிய சமூகத்திற்கு நீதி தேவை என்ற எண்ணம் வலுப்படுகிறது. 


Tags : mosque ,conversion ,gurudwara ,Pakistan ,India , Pakistan, Gurudwara, Mosque, India, Condemnation, Minority, Community, Religious Rights
× RELATED ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் பூஜை...