மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் குற்றவாளி!: ரூ.4,500 கோடி கையாடல் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என்று அந்நாட்டு உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. சுமார் 5 ஆண்டு காலம் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் இன்று காலை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் பதவியில் இருந்த போது தமது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுவிட்டதாக கோலாலம்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்த குற்றச்சாட்டுகளுக்கான அனைத்து ஆதாரங்களும் முழுமையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதாகவும், அவையனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளதாகவும் நீதிபதி அறிவித்துள்ளார். தேசிய முன்னணி கூட்டணி கட்சியை சேர்ந்தவரான நஜீப் ரசாக், தாம் பிரதமராக இருந்த போது 2015ம் ஆண்டு அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதியுமான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் கையாடல் செய்தார் என்பது குற்றச்சாட்டாகும். இந்த புகார் மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பெரும் போராட்டங்களுக்கும் வித்திட்டது.

இதையடுத்து அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனைகளின் போது 273 மில்லியன் டாலர் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அவருடைய 408 வங்கி கணக்குகளையும் முடக்கி வைத்திருந்தனர். அரசாங்க நிதியிலிருந்து தொகையை நஜீப்பும் அவருக்கு நெருக்கமானவர்களும் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசாங்க நிதியிலிருந்து சுமார் 10 மில்லியன் டாலர் தொகையை நஜீப் பெற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து வந்த நிலையில், மலேசிய நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: