×

ரேஷன் கடைகளில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் காமராஜ் பேட்டி

சென்னை: ரேஷன் கடைகளில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும்  உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் நேற்றுவரை 95,857 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 2,032 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், சென்னை தியாகராய நகர், பாண்டி பஜாரில் மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மாநகராட்சியில் நடைபெறும் பணிகள் 100% செம்மையாக நடைபெற்று வருகிறது. அதனால் தான் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு வீடு தேடு சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் கடைகளில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கும் 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒரே தேசம், ஒரே அட்டை என்ற திட்டம் செயல்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பயோமெட்ரிக் முறை நடைமுறைபடுத்தப்படும். குடும்ப அட்டைக்காக புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 71,000  பேருக்கு குடும்ப அட்டை இல்லாமல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும், என தெரிவித்துள்ளார்.


Tags : Kamaraj ,country ,ration shops , Tamil Nadu, One Nation One Ration, Corona, Minister Kamaraj
× RELATED 'ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் முழுவதும்...