×

தென்காசி விவசாயி உயிரிழந்த விவகாரம்: பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயி. இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையம் வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அணைக்கரை முத்துவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த அவரது உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையே, அணைக்கரை முத்துவின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நேற்று 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அணைக்கரை முத்துவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் ஈடுபட்டனர். ஆனால் அவரது குடும்பத்தினர் சமாதானத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், உயிரிழந்த விவசாயியின் உடலை, மூத்த தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட  கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விவசாயியின் மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், தமது கணவர் இறப்புக்கு காரணமான வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட ஒழுங்கு காரணமாகவே பிரேத பரிசோதனை உடனடியாக செய்யப்பட்டதாக விளக்கமளித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதி, மாலை 4 மணக்கு மேல் உடற்கூராய்வு செய்யக்கூடாது என விதி உள்ளநிலையில் இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கின் நிலை அறிக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவை சீலிட்டி கவரில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.



Tags : High Court ,Tenkasi , Tenkasi farmer, autopsy report, Government of Tamil Nadu, High Court Branch
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...