×

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தலைமறைவு!: பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தால் பரபரப்பு..!!

நாகர்கோவில்: நாகர்கோவிலில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தலைமறைவானதை தொடர்ந்து, அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த ஆண் நண்பருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாயமானார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் இருவரையும் தேடி கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து, மீட்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, 2 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்பட பலர் தம்மை பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதையடுத்து நாஞ்சில் முருகேசன் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் தலைமறைவான நாஞ்சில் முருகேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நாஞ்சில் முருகேசனுக்கு சொந்தமான வீடுகளை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் புகார் வெளியானதை அடுத்து, நாஞ்சில் முருகேசனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் நாஞ்சில் முருகேசன் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. 15 வயது சிறுமியை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பலாத்காரம் செய்த செய்தி வெளியாகி நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags : AIADMK ,Nagercoil ,victim girl ,Nanjil Murugesan ,Disappearance , Former AIADMK MLA , Nagercoil,15-year-old girl ,Nanjil Murugesan
× RELATED அதிமுக எம்.பி. வீட்டில் வெடிகுண்டு...