×

பெங்களூருவில் கொரோனா பரிசோதனைக்கு அடையாள அட்டை கட்டாயம்..: போலியான முகவரி கொடுக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை!

ஜெய்ப்பூர்: போலியான முகவரியைக் கொடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்வதைத் தவிர்க்க பெங்களூருவில் கொரோனா பரிசோதனைக்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நாடு முழுவதும் தீவிரமாகிக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்கு வரும் பலரும் தங்கள் உண்மையான வீட்டு முகவரியைக் கொடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், கொரோனா உறுதியானால் அவர்களைத் தேடி செல்லும்போது குறிப்பிட்ட அந்த முகவரியில் அந்த நபர் இருப்பது இல்லை என்று மருத்துவப் பணியாளர்கள் திருப்பி வருகின்றனர். தங்களுக்கு கொரோனா உள்ளது என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடுவார்களோ என்று பயந்து பலரும் தலைமறைவாகிவிடுகின்றனர்.

இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து செல்போன் எண் தவிர பிற ஆவணங்களையும் வாங்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் தவறான முகவரி கொடுப்பதை தடுக்கும் விதமாக, பெங்களூரு மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வரும் நபர்கள் முதலில் தங்களிடம் உள்ள அடையாள அட்டையை கண்டிப்பாக வழங்க வேண்டும். சரியான முகவரியுடன் உள்ள ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை வழங்க வேண்டும். தங்களது செல்போன் எண்ணையும் அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும்.

அவற்றை சரிபார்த்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாநகராட்சியில் இருந்து, அவர்களது செல்போனுக்கு ரகசிய குறியிட்டு (ஓ.டி.பி.) எண் வரும், அந்த எண்ணை கொடுத்த பிறகே சம்பந்தப்பட்ட நபர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். இதன்மூலம் தவறான முகவரி, செல்போன் எண்ணை கொடுப்பது தவிர்க்கப்படும் என்றும், பரிசோதனை வந்ததும் கொரோனா பாதித்தவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய உத்தரவு இன்னும் 2 நாட்களுக்குள் பெங்களூருவில் அமல்படுத்தப்படும் என்றும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பாதித்த 3,338 பேர் தவறான முகவரி மற்றும் செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு சிகிச்சை பெறாமல் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : corona test ,Bangalore , Bangalore, Corona, test, identity card, fake address
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...