×

கைதான காவலர்கள் 3 பேருக்கும் சிபிஐ அதிகாரிகள் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி : சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு விசாரணையில் தொய்வு!!

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைதான காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகனான ஜெயராஜ்-ஃபென்னிக்ஸ் இருவரும் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவரும் போலீஸாரால் மிக கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட 10 பேரில் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே கைது செய்யப்பட்ட முருகன், முத்து ராஜ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.  இவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவுகள் வெளியானதில், காவலர்கள் முத்து ராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலின் விளைவாகவே இந்த சூழல் உருவாகியுள்ளது என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் கொரோனா பரவியுள்ளதால், இது பிற கைதிகளையும் பாதித்திருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த தகவலையடுத்து மதுரை சிறையில் தேவையான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளச் சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2 தினங்களுக்கு முன்பு எஸ்.எஸ்.ஐ. பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதும் இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் 8 பேரில் 6 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.சிபிஐ அதிகாரிகள் 6 பேரும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : CBI ,guards ,policemen , Guards, CBI Officers, Corona, Infection, Confirmation, Satankulam, Father, Son, Trial, Chipping
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...