×

உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம் தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனைக்கு தடையில்லை

புதுடெல்லி: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு தடையில்லை என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான இடைக்கால மனுக்களை விசாரிக்க வேண்டுமானால் உயர் நீதிமன்றத்தை அணுகி

முறையிடலாம் எனக்கூறி, அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து நேற்று உத்தரவிட்டது. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளை கடந்த மே 7ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதித்தது.

ஆனால், விற்பனையின் போது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டதால் திறந்த மதுக்கடைகள் அனைத்தையும் உடனடியாக மூடுமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என கூறியதோடு, இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதித்தது. மேலும் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானத்தை ஆன் லைன் மூலம் விற்பனை செய்ய மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து, தற்போது வரை டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்வது குறித்த அனைத்து விவரங்களும் கொண்ட அறிக்கையை பிரமாணப் பத்திரமாக கடந்த 3ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தாக்கல்

செய்யப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக்பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பு வாதத்தில், “டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு என்பது ஊரடங்கு காலத்தில் தொடரப்பட்டது என்பதால், அது தற்போது காலாவதி ஆகிவிட்டதாகத்தான் கருதப்படும். அதனால் வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு என்பது தொடரும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது

என்பதால், டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு தடையில்லை. இருப்பினும் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ரிட் மற்றும் இடைக்கால மனுக்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றாலோ,

அல்லது வழக்கை முடித்து வைக்க விரும்பினாலோ மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திற்கு சென்று முறையிடலாம்’’ என தெரிவித்த நீதிபதிகள், டாஸ்மாக் மதுபான விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கை முடித்து வைத்து

உத்தரவிட்டனர்.

Tags : sale ,Tamil Nadu ,Supreme Court ,Tasmag , Supreme Court, Tittavattam, Tamil Nadu, Tasmag liquor sales, no ban
× RELATED மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி...