×

கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி வைத்து குறுநில மன்னர்கள் போல் செயல்படும் அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்கங்கள்: தாமத அட்மிஷனால் 70 வயதானவர் மருத்துவமனையில் பலி

சென்னை: சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களை ஒதுக்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களை அந்த குடியிருப்பின் நலச்சங்க நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பாதித்தவர்களை வெறுத்து ஒதுக்காமல், அவர்களை அரவணைத்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதையும் மீறி கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில்  சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பணி புரிந்து வந்த ஒருவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்காத காரணத்தால் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  70 வயது முதியவர் பாதுகாவலராக பணியாற்றிவந்தார். சிறுவயதில் ஊரை விட்டு சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த இவர், பல்வேறு  இடங்களில் பணியாற்றி விட்டு கடந்த சில ஆண்டுகளாக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றினார்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி இவருக்கு கொரோனா அறிகுறிகள் தீவிரமாக இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கு தங்கியிருந்த சிலர் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு சென்ற அதிகாரிகள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்த நலச்சங்க நிர்வாகிகள் சிலர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் குடியிருப்புக்கு பிரச்னை வரும் என்று நினைத்து மருத்துவமனையில் அனுமதிக்க விடாமல் தடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எவ்வளவு அறிவுறுத்தியும் முதியவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விடாத காரணத்தால் மாநகராட்சி அதிகாரிகள் சென்றுவிட்டனர்.

இதன்பிறகு மதியம் 2 மணிக்கு அந்த குடியிருப்பு வாசிகள் மீண்டும் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு முதியவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அவர் மரணமடைந்துவிட்டார். இதன் பிறகு நடைபெற்ற சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உரிய வழிமுறைகளை பின்பற்றி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த முதியவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். இதைப்போன்று சென்னையில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

இதுபோன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியதாவது:
நான் தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தேன். மே மாதம் எனது குடும்பத்தில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எந்த வித அறிகுறியும் இல்லாத காரணத்தால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் விடவில்லை. எங்கள் வீட்டிற்கு பால் கொண்டு வருபவர்கள் உள்ளிட்ட யாரையும் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளித்தேன். காவல் துறை அதிகாரிகள் வந்து அறிவுறுத்திய பின்பு தான் அனைத்தும் பழைய நிலைக்கு வந்தது.

அதன்பிறகு நாங்கள் வீட்டு தனிமையில் இருந்த 14 நாட்களும் நாங்கள் வசித்த தளத்தில் விளக்குகள் எரியாமல்தான் இருந்தது. தூய்மை பணியை மேற்கொள்ளவும் பணியாட்களை அனுப்பவில்லை. தற்போது தான் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளோம். சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : hospital , Corona victim, 70-year-old dies in hospital
× RELATED முதியவரிடம் வழிப்பறி