×

எல்லையில் 50 ஆயிரம் வீரர்கள் நிறுத்தம் சீனா மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமா?: பீரங்கி, ராணுவத்தினரை குவிக்கிறது இந்தியா

புதுடெல்லி: லடாக் கல்வான் பள்ளதாக்கில் இந்தியா, சீனா ராணுவத்தின் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் படைகள் வாபஸ் பெற சம்மதிக்கப்பட்டது. இதன்படி படைகளை திரும்ப பெறும் நிலையிலும், மறைமுகமாக வீரர்கள், டாங்குகள், ராடார்கள், ஏவுகணைகளை அக்சாய் சின் பகுதியில் நிறுத்தும் சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வந்தது. இந்நிலையில், இந்தியாவின் கடைநிலை எல்லையான தவுலத் பெக் ஓல்டியை ஒட்டிய சீன எல்லைக்குட்பட்ட அக்சாய் சின் பகுதியில் சீனா 50,000 வீரர்களை குவித்துள்ளது. அவர்கள் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றனர்.

இதனால் சீனாவின் சூழ்ச்சியை தவிடுபொடியாக்க அப்பகுதியில் இந்தியாவும் டி-90 ஏவுகணை டாங்குகள், பீரங்கிகள் மற்றும் 4,000 வீரர்களை நிறுத்தி உள்ளது. இதன் மூலம் சாக்ஸ்காம்-கரகோரம் கணவாய் வழியாக சீன படையினர் அதிரடி தாக்குதல் நடத்துவது தடுத்து நிறுத்தப்படும் என்று மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்தார். தவுலத் பெக் ஓல்டி, வடக்கில் கல்வான்-ஷியோக் ஒன்றிணையும் இடத்தில் சிப்-சாப் ஆற்றின் கரையில்,  தெற்கு கரகோரம் கணவாயில் இருந்து 16,000 அடி உயரத்தில் மலையில் அமைந்துள்ளது. இதுவே இந்தியாவின் கடைநிலை எல்லையாகும்.

தர்பக்-ஷியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலையில் உள்ள சில பாலங்களின் வழியாக 46 டன் எடை கொண்ட டி-90 டாங்க், வீரர்களால் இயக்கப்படும் போர் வாகனங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல முடியாது என்பதால், சிறிய ரக பீரங்கிகள், துப்பாக்கிகள் ஆகியவை அங்குள்ள நிலைகளில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிக உயரமான  தவுலத் பெக் ஓல்டியில் படைகளை நிறுத்தி உள்ளதால், வடக்கில் இருந்து சீனப் படையினர் தாக்குதல் நடத்துவது முறியடிக்கப்பட்டுள்ளது.

1963ல் பாகிஸ்தான் சட்டவிரோதமாக சீனாவுக்கு வழங்கிய 5163 சதுர கிலோ மீட்டர் பகுதியில், சாக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா ஏற்கனவே 36 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைத்துள்ளது. தற்போது, கசா-காஷகர் நெடுஞ்சாலையில் இருந்து கரகோரம் பகுதிக்கு ஷாக்ஸ்காம் கணவாய் வழியாக சீனா பாதை அமைக்க முயற்சிக்கிறது. அப்படி சாலை அமைத்தால், சீனா தவுலத் பெக் ஓல்டியை குறிவைக்க வாய்ப்புள்ளது என ராணுவ தரப்பில் கூறப்படுகிறது. இதனால் சீனா இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதா? என்ற பதற்றம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags : troops ,China ,border ,India , Border, 50 thousand soldiers, stop, China, plan to attack ?, artillery, troops, India is concentrating
× RELATED போடியில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு