×

பிரான்சில் இருந்து முதல்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் புறப்பட்டன: நாளை அரியானா வருகிறது

புதுடெல்லி: முதல்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் நேற்று பிரான்சில் இருந்து புறப்பட்டன. இவை நாளை அரியானா விமான தளத்தை வந்தடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்சிடம் இருந்து ரூ.59ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதில் 30 போர் விமானங்கள், 6 பயிற்சி விமானங்கள் ஆகும். பயிற்சி விமானம் இரண்டு இருக்கை கொண்டது. இந்நிலையில் முதல்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் நேற்று பிரான்சில் இருந்து புறப்பட்டன. இவை ஐக்கிய அரபு எமிரேட்சில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்படும்.

இதனை தொடர்ந்து 7,000 கிமீ தூரத்தை கடந்து நாளை அரியானாவில் உள்ள அம்பாலா விமான தளத்தை 5 ரபேல் விமானங்கள் வந்தடையும். ரபேல் விமானங்கள் புறப்படுவதற்கு முன்பாக பிரான்சுக்கான இந்திய தூதர் ஜாவித் அஷ்ரப், இந்திய விமானப்படை விமானிகளுடன் கலந்துரையாடினார். ரபேல் விமானங்கள் நாளை பிற்பகல் இந்திய விமானப்படையில் இணைக்கப்படும். முறையான அறிமுக விழா ஆகஸ்ட் மத்தியில் நடைபெறும் என விமானப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய எல்லைப்பகுதியில் சீனா தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய விமானப்படையின் திறன்களை மேம்படுத்தும் வகையில், லடாக் பகுதியில் ரபேல் போர் விமானங்கள் நிறுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது கட்டமாக பெறப்படும் ரபேல் போர் விமானங்கள் மேற்கு வங்கத்தின் ஹசிமாரா விமான தளத்தில் நிறுத்தப்படும். 2 விமான தளங்களிலும் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.400கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த அக்டோபரில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட போது, முதல் ரபேல் விமானம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 36 விமானங்களில் 30 போர் விமானங்களாகவும் 6 பயிற்சி அளிக்கும் பணிக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளன.

* எதிர்கால தேவை
தற்போது பயன்பாட்டில் இருக்கும் மிக்-21 மற்றும் மிக்- 27 ஆகிய போர் விமானங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து, விமானப்படையின் பலத்தை அதிகரிப்பதற்கு, ரபேல் போன்ற அதிநவீன பன்முக செயல்திறன் கொண்ட போர் விமானங்களை அவசரமாக சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, எல்லைகளில் அண்டை நாடுகளின் அடாவடிகளை கட்டுப்படுத்த ரபேல் போர் விமானங்கள் துணை நிற்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 36 ரபேல் போர் விமானங்களை வைத்து 2 விமானப் படை பிரிவுகள் உருவாக்க முடியும். வடக்கு மற்றும் வடகிழக்கு மாநில எல்லையோர பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த விமான படைப்பிரிவுகள் செயல்படும்.

சிறப்பம்சங்கள் என்னென்ன?
* ரபேல் போர் விமானம் 15.30 மீட்டர் நீளம், 10.90 மீட்டர் அகலம், 5.30 மீட்டர் உயரம் கொண்டது. எதிரியின் ரேடார்களில் இருந்து எளிதாக தப்பும் வகையிலான வடிவமைப்பு அம்சங்களை கொண்டது.
* இதில், ஸ்நெக்மா எம்-88-2 டர்போஃபேன் என்ற இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து காலநிலைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். மேலும், ஒற்றை எஞ்சின் போர் விமானங்களை விட இது பாதுகாப்பு அதிகம் கொண்டது.
* இந்த விமானத்தில் 3டி நிகழ்நேர வரைபடத்தை பெறும் வசதி இருப்பதால், இலக்குகளை சரியாக குறிவைத்து தாக்குதல் நடத்த முடியும். அனைத்து தட்பவெப்ப நிலையிலும் துல்லியமான வரைபடத்தை பெற முடியும்.
* சுகோய் எஸ்யூ 30எம்கேஐ விமானத்தைவிட இது எடை மிகவும் குறைந்தது. எனவே, ஒருமுறை முழு எரிபொருள் நிரப்பினால் 3,700 கிமீ தூரம் வரை பயணிக்கும். அதாவது, எதிரிகளின் பகுதிகளுக்குள் அதிக தூரம் பயணித்து திரும்பும் ஆற்றல் கொண்டது.
* மணிக்கு 2,130 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. இயல்பாக மணிக்கு 1,912 கிமீ வேகம் வரை செலுத்த முடியும். எனவே, இதனை ஏவுகணைகளை வீசி தாக்குவது என்பதும் சவாலானதாகவே இருக்கும்.

Tags : time ,France ,Haryana , In France, 5 Rafale, warplanes, departed, Haryana tomorrow
× RELATED 10 ஆண்டுகளில் முதல் முறையாக முன்னணி ஐடி...