×

24 மணி நேர கொரோனா பாதிப்பு, பலியில் உலகளவில் இந்தியா 2வது இடம்

புதுடெல்லி: உலக அளவில் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. இதில் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 49,931 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 14 லட்சத்து 35 ஆயிரத்து 453 ஆக உயர்ந்துள்ளது. இதே போல கடந்த 24 மணி நேரத்தில் 708 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 32 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் ஒரே நாள் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் 24 மணி நேரத்தில் அமெரிக்காவில்தான் அதிகளவில் மக்கள் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர். அங்கு, கடந்த 24 மணி நேரத்தில் 56 ஆயிரத்து 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் மொத்த பாதிப்பு 43 லட்சத்து 71 ஆயிரத்து 839 ஆக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் மட்டுமே பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தொடுகிறது.
மோசமான பாதிப்பில் 2வது இடத்தில் உள்ள பிரேசிலில் கூட தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 23,467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா (11,000+) தவிர மற்ற நாடுகளில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதே போல பலி எண்ணிக்கையிலும் இந்தியா நம்பர்-2 இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில் அதிக பலி ஏற்பட்ட நாடு மெக்சிகோ. அங்கு 729 பேர் இறந்துள்ளனர். அதன்பிறகு இந்தியாவில் 708 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 451 பேரும் பிரேசிலில் 556 பேரும் இறந்துள்ளனர். எனவே உலக அளவில் மிக மோசமான கொரோனா பாதிப்பை சந்திக்கும் நாடாக இந்தியா மிக விரைவில் மாறும் அபாயம் வெகுதூரத்தில் இல்லை என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

* 9 லட்சம் பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் பாதிப்பு அதிகரித்தாலும், குணமடைவோர் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 9 லட்சத்து 17 ஆயிரத்து 567 பேர் குணமடைந்துள்ளனர். 4 லட்சத்து 85 ஆயிரத்து 114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோர் சதவீதம் 63.92 ஆகும். கடந்த ஞாயிறு அன்று அதிகபட்சமாக நாடு முழுவதும் 5 லட்சத்து 15 ஆயிரத்து 472 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : world ,India , 24 hours, corona exposure, deaths, globally, India ranks 2nd
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்