×

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ 9 மணி நேரம் விசாரணை: இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரணை நடந்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக என்ஐஏ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான சொப்னா கும்பலுடன், மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. சுங்க இலாகாவினர் 9 மணிநேரமும், என்ஐஏ 5 மணிநேரமும் அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து முதல்வரின் முதன்மை செயலாளர், ஐடி செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜாக என்ஐஏ நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நேற்று காலை 9.15 மணிக்கு அவர் கொச்சி என்ஐஏ அலுவலகத்துக்கு வந்தார். சுமார் 10 மணிக்கு அவரிடம் விசாரணை தொடங்கியது. என்ஐஏ தென்மண்டல டிஐஜி வந்தனா தலைமையிலான அதிகாரிகள் சிவசங்கரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். சொப்னா உள்பட அனைவரிடமும் இருந்து கிடைத்த தகவல்களை வைத்து 50க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய பட்டியலை என்ஐஏ தயாரித்து வைத்திருந்தது. விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணை நேரடியாக டெல்லியில் உள்ள என்ஐஏ உயர் அதிகாரிகளுக்கு ஒளிபரப்பப்பட்டது.

இடையிடையே டெல்லியில் இருந்தும் என்ஐஏ அதிகாரிகள் சிவசங்கரிடம் கேள்விகளை கேட்டுள்ளனர். இந்த விசாரணையை கேரளா மட்டும் அல்லாமல் மத்திய அரசும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணிவரை தொடர்ந்து 9 மணி நேரம் நடந்தது. சிவசங்கர் அளித்த பதில்களில் திருப்தி ஏற்படாததால் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக என்ஐஏ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி போராட்டத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

* ஐக்கிய அரபு அமீரகம் விசாரணை
தூதரகம் வழியாக தங்கம் கடத்திய சம்பவம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளதால், இது தொடர்பாக விசாரணை நடத்த அமீரக வெளியுறவுத்துறை நடவடிக்கை தொடங்கி உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதராக இருந்த ஜமால் உசைன் அல்சாபி, ஊரடங்கு சட்டம் தொடங்குவதற்கு முன்பே துபாய் சென்று விட்டார். இதையடுத்து அவரது பொறுப்பு அட்டாஷே என்று அழைக்கப்படும் ராஷித் அல்சலாமியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

சொப்னா கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருந்ததால் அவர் ரகசியமாக துபாய் சென்று விட்டார். தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக துபாயில் அமீரக வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் அட்டாஷே ராஷித் அல்சலாமியிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சில வாரங்களாக திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் உயர் பொறுப்பில் யாரும் இல்லாத நிலை உள்ளது. இதையடுத்து தூதரகத்தின் 2வது செயலாளர் பொறுப்பில் உள்ள மப்ரூக் செய்யது அலி அப்துல்லா அல்மன்சூரி திருவனந்தபுரம் அனுப்பப்பட்டார். அவர் நேற்று முன்தினம் தூதரக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

* வங்கி லாக்கரில் ரூ.45 லட்சம் முதலீடு ஆவணம்
என்ஐஏ அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் சொப்னாவின் வங்கி லாக்கர்களை திறந்து பரிசோதித்த போது, ஒரு கிலோவுக்கு மேல் தங்கமும் ஒரு கோடிக்கு மேல் பணமும் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் மேலும் சில வங்கிகளில் கணக்கும், லாக்கர்களும் இருந்தது தெரியவந்துள்ளது. திருவனந்தபுரத்தில் ஒரு வங்கி லாக்கரை திறந்து பரிசோதித்தபோது, ரூ.45 லட்சம் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் பல வங்கிகளில் அவருக்கு கோடி கணக்கில் நிரந்தர வைப்பு தொகை முதலீடு செய்துள்ள ஆவணங்களும் சிக்கின.

Tags : Sivasankar ,NIA ,Kerala ,court , Kerala, gold smuggling case, IAS officer Sivashankar, NIA 9 hours, investigation
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை