×

இத்தாலி சீரி ஏ கால்பந்து ஜுவென்டஸ் மீண்டும் சாம்பியன்

மிலன்: சீரி ஏ கால்பந்து தொடரில், ஜுவென்டஸ் அணி தொடர்ந்து 9 வது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது. இத்தாலியின் பிரபல கால்பந்து தொடரான சீரி ஏ போட்டியில், 20 முன்னணி கால்பந்து கிளப் அணிகள் லீக் சுற்றில் மோதி வருகின்றன. கொரோனாவால் மார்ச் மாதம் 9ம் தேதி  போட்டிகள் நிறுத்தப்பட்டபோது ஜுவென்டஸ் அணிதான் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. மீண்டும் தொடங்கிய பிறகும் அதே நிலை நீடித்தது. அதனால் நடப்பு சாம்பியனான ஜுவென்டஸ் சில போட்டிகளிலேயே சாம்பியன் பட்டத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக 2 டிரா செய்ததால் அது சற்று தாமதமானது.

இந்நிலையில் நேற்று ஜுவென்டஸ்-சாம்ப்டோரியா அணிகள் மோதின. இதில் ஜுவென்டஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, பெர்னார்டெஸ்சி  கோல் போட்டனர்.
இந்த வெற்றியை அடுத்து, ஜுவென்டஸ் அணி தொடர்ந்து 9வது முறையாக கோப்பையை கைப்பற்றுவதை உறுதி செய்தது. இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் ஜுவென்டஸ் 83 புள்ளிகளை பெற்றுள்ளது (36போட்டி, 26வெற்றி, 5 டிரா, 5 தோல்வி). அடுத்த இடத்தில் உள்ள இன்டர் மிலன் (76புள்ளி), அட்லான்டா, லாசியோ (தலா 75புள்ளி) அணிகள் கடைசி 2 லீக் ஆட்டத்தில் வென்றாலும், ஜுவென்டஸ் கோப்பையை முத்தமிடுவதை தடுக்க முடியாது. இந்த தொடர் ஆக.2ம் தேதியுடன் முடிகிறது. அன்று ஜூவென்டஸ் அணிக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்படும்.

* ஹாட்ரிக்கில் ஹாட்ரிக்!
இத்தாலி சீரி ஏ கோப்பையை தொடர்ந்து 9வது முறையாக ஜுவென்டஸ் அணி வென்றுள்ளது. அந்த அணி 2011-12 சீசன் முதல் தொடர்ந்து கோப்பையை வென்று வருகிறது. அதாவது ஹாட்ரிக் சாதனையை தொடர்ச்சியாக 3 முறை நிகழ்த்திய பெருமையை வசப்படுத்தி உள்ளது. மேலும், அந்த அணி 36 முறை சீரி ஏ கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதுதவிர 21முறை 2வது இடத்தை பிடித்துள்ளது.

* ரொனால்டோவுக்கு 2வது கோப்பை
ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியில் இருந்த கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுகல்), கடந்த 2 ஆண்டுகளாக இத்தாலியின் ஜூவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது சீரிய ஆட்டத்தின் உதவியுடன் ஜூவென்டஸ் 2 முறை கோப்பையை வென்றுள்ளது.

* கொரோனாவில் இருந்து மீண்டு...
சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த தொடர் மீண்டும் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் ஜுவென்டஸ் வீரர் டைபாலா கொரோனா தொற்றில் இருந்து மீண்டார். அணியின் 10ம் எண் சீருடை வீரரான டைபாலாவுக்கு இது 5வது சீரி ஏ கோப்பை. அர்ஜென்டினா வீரரான டைபாலா 2015ம் ஆண்டு முதல் ஜூவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

Tags : Serie A football Juventus champions again , Italy, Serie A football, Juventus, champion again
× RELATED இத்தாலியில் அக்டோபர் 15ம் தேதி வரை...