×

அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றம்; ஆக.3ல் தேரோட்டம் நடைபெறுகிறது

அலங்காநல்லூர்: அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆக.3ல் நடக்கிறது. மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் நேற்று காலை மேலதாளம் முழங்க கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதில் அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கப்பட்டு கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.

இதைதொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி-பூதேவி-சமேத கள்ளழகர் என்கிற சுந்தரராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜை, தீபாரதனை நடந்தது. இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று காலை தங்க பல்லக்கு உற்சவம் நடந்தது. தினமும் இரவு சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. ஆக. 1ம் தேதி இரவு புஷ்ப சப்பரமும், 2ம் தேதி ஆடி 18ம் பெருக்கு விழாவும், 3ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமும் நடைபெறுகிறது. 4ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாச்சலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் திருவிழாவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : election ,Algarve ,Audi Festival , Algarve Temple, Audi Festival, Flag hoisting
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...