×

பஞ்சாப்பில் 70,000 போலி ஓய்வூதிய கணக்குகள் மூலம் ரூ.163 கோடி மோசடி

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் 70,000 போலி ஓய்வூதியக் கணக்குகள் மூலம் ரூ.163 கோடி மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 2015ம் ஆண்டு 58 வயதான பெண்கள் மற்றும் 65 வயதை அடைந்த ஆண்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மாநில அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.750 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. பயனாளர்களின் வங்கிக்கணக்கில் மாநில அரசே நேரடியாகப் பணம் செலுத்தி வந்தது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மோகா மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதான குர்தேஜ் கௌர் எனும் பெண்மணி, கடந்த சில மாதங்களாகவே என் கணக்குக்கு ஓய்வூதியப் பணம் வரவு வைக்கப்படவில்லை என்று மாநில அரசுக்குப் புகார் அளித்தார். இவரைப் போலவே அமிர்தசரஸ், பதிந்தா, மான்சா உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பலரும் ஓய்வூதியப் பணம் முறையாக வந்து சேரவில்லை என்று மாநில அரசுக்குப் புகார் அளித்தனர்.

ஓய்வூதியதாரர்களின் புகார் அதிகமானதைத் தொடர்ந்து விசாரணை நடத்த மாநில சமூக நலத்துறைக்கு உத்தரவிட்டார் பஞ்சாப் மாநில முதல்வர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் போலியான சான்றிதழ்களைக் கொடுத்து, இருபது மாவட்டங்களில் 70,000 போலி ஓய்வூதியக் கணக்குகள் மூலம் ரூ.163 கோடி அளவுக்கு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் மாநில எதிர்க்கட்சியினர், இந்த மோசடி மூலம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

எதிர்க்கட்சியினருக்குப் பதில் அளித்துள்ள மாநில முதல்வர் அமரீந்தர் சிங், 2017 - ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தகுதியான ஆறு லட்சம் பேரை இத்திட்டத்தில் சேர்த்துள்ளோம். அரசியல் கட்சிகள் சுயநலமாக தங்களின் சொந்த நலன்களை மேம்படுத்துவதற்காகத் தவறான செயல்களில் ஈடுபடும்போது இவ்வாறு மோசடிகள் நடக்கின்றன. தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.



Tags : Punjab Punjab , Punjab, Pension Accounts, Fraud
× RELATED வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி...