×

தமிழகத்தில் கல்லூரி இறுதித் தேர்வுகளை ரத்து செய்க!: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மீண்டும் கோரிக்கை..!!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கலை, அறிவியில், பாலிடெக்னிக், பொறியியல் என அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.

இந்நிலையில், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்துவதால் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலைக்கு செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பொறியியல் கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்துள்ளனர். வங்கியில் கல்விக்கடன் பெற்று படிக்கும் மாணவர்கள் உரிய காலத்தில் வேலைக்கு செல்லவில்லை எனில் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வேலைக்கு செல்ல வேண்டுமெனில் படிப்பு முடித்து அதற்கான சான்றிதழ்களும், பட்டப்படிப்பு சான்றிதழ்களும் அவசியம் என்றே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்ததாவது, கல்லூரி இறுதித் தேர்வு பாடங்கள் எளிமையானவையாக இருக்கும். இந்த சூழ்நிலையில் தேர்வினை நடத்த வேண்டும் என்று முனைப்புடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. கல்வியை வியாபாரம் செய்யும் நபர்களிடம் இதற்கு ஆலோசனை கேட்காமல் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்களிடம் ஆலோசனை கேட்பது தான் சிறந்தது. ஊரடங்கு நேரத்தில் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகிவிடும். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,Teachers ,government , college final exams , Tamil Nadu,Teachers ,students , Tamil Nadu government,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...